இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை மறுதினம் (18) புதன்கிழமை ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமருக்குத் தமிழ்க் கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடிதம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ இந்தியப் பிரதமரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டு அவருக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 7 தமிழ்க்கட்சிகள் இணைந்து கூட்டாகக் கடிதம் அனுப்புவது தொடர்பில் நேற்றைய (15) தினம் கலந்துரையாடியிருந்தோம்.
இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதனை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளோம். எதிர் வரும் புதன்கிழமையளவில் நரேந்திர மோடிக்கான கடிதத்தை 7 கட்சித் தலை வர்களும் ஒப்பமிட்டு அனுப்பவுள்ளோம்.” எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும், சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வை வென்றெடுப்பதற்கான முதற்கட்ட நகர்வாக இது இருக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.
மறுபுறத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், அதற்கு முன்னதாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வு தொடர்பில் இந்தியா மௌனம் காத்துவருகின்றது.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கமைய தீர்வை முயற்சிகளை முன்னெடுப்பதற்கான சாத்தியம் அரிது, ஜனாதிபதியால் நடத்தப்பட்ட சர்வக்கட்சி கூட்டம் உள்ளிட்ட நகர்வுகள்கூட தேக்கம் அடைந்துள்ளன.