You are currently viewing உள்ளாட்சி தேர்தலை நடத்த  முயற்சி – தேர்தல் ஆணைக்குழுவால் புதிய யோசனை முன்வைப்பு

உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி – தேர்தல் ஆணைக்குழுவால் புதிய யோசனை முன்வைப்பு

ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான புதிய முயற்சியில் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளது. இதற்கமைய தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட புதிய கோரிக்கை பட்டியலையும் தேர்தல் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட புதிய செலவீன பட்டியலின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு முதற்கட்டமாக 2.2 பில்லியன் ( 2 ஆயிரத்து 200 மில்லியன்) ரூபா மட்டுமே தேவைப்படும் எனவும், எஞ்சிய தொகையை மூன்று மாத காலப்பகுதிக்குள் விடுவிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

” நீண்ட காலமாக நிலுவையில் உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதை உறுதி செய்வதற்கான மற்றொரு முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” – என்று தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அரசின் நிதி நிலைமை தற்போது முன்னேற்றம் அடைந்துவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது செயற்படும் புதிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 ஜுன் 29 ஆம் திகதியே நியமிக்கப்பட்டனர். அதற்கு முன்னர் நிமல் புஞ்சிஹேவா தலைமையிலான குழுவினரே செயற்பட்டனர்.

அந்தவகையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழுவினரின், தேர்தலை நடத்துவதற்கான முதல் முயற்சியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திறைசேரிக்கு வழங்கப்பட்ட பட்டியலின் பிரகாரம்,

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளில், 1.1 பில்லியன் ரூபாவும், அடுத்த 15 நாட்களுக்குள் 100 மில்லியன் ரூபாவும், அடுத்த 15 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபாவும், அதற்கு அடுத்த 20 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபாவும் கோரப்பட்டுள்ளது.

இதில் தேர்தலுக்கு முன்னதாக பொலிஸ் திணைக்களத்துக்கு 400 மில்லியன் ரூபாவும், அரச அச்சகத்துக்கு 200 மில்லியன் ரூபாவும், அஞ்சல் திணைக்களத்துக்கு 500 மில்லியனும் வழங்கப்பட வேண்டும்.

இதற்கமைய தேர்தல் நடத்தப்படும்வரை 2.2. பில்லியன் ரூபாவே தேவைப்படும் எனவும், மீதமுள்ள 6.8 பில்லியன் தேர்தலுக்கு பின்னரே தேவைப்படும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கு பின்னர் எஞ்சிய தொகையை செலுத்துவதற்கான 3 மாத அவகாசத்தில், முதல் மாதத்தில் 1.9 பில்லியன் ரூபாவும், இரண்டாவது மாதத்தில் 1.5 பில்லியன் ரூபாவும், மூன்றாவது மாதத்தில் 1 பில்லியனும் செலுத்தப்பட வேண்டும்.

அதேபோல தேர்தலுக்கு பின்னர் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு பில்லியனும், அரச அச்சகத்துக்கு 300 மில்லியன் ரூபாவும், அஞ்சல் திணைக்களத்துக்கு 700 மில்லியன் ரூபாவும், ஏனைய திணைக்களங்களுக்கு 400 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட வேண்டும்.

உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுவருகின்றது. தேர்தலுக்காக பொறுப்பேற்ற வேட்பு மனுக்களைக்கூட இரத்து செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.