You are currently viewing சர்வதேச விசாரணை அறிக்கைகளை கோருகிறது கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

சர்வதேச விசாரணை அறிக்கைகளை கோருகிறது கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலம்வாய்ந்த நாடுகளின் புலனாய்வுக் குழுக்களால் வழங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் முன்னிலையில் கூறப்பட்ட அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒக்டோபர் 6ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ஜேர்மன் ஊடக நிறுவனமான ‘Deutsche Welle’இல் தகவல் வெளிவரும் வரையில் தாமோ அல்லது நாட்டு மக்களோ இது பற்றி அறிந்திருக்கவில்லை என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

” அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பணியகம் (FBI), பிரித்தானிய பொலிஸார், ஆஸ்திரேலிய, இந்திய, சீனா மற்றும் பாகிஸ்தான் இரகசிய விசாரணை குழுக்கள் தாக்குதல் குறித்து அறிக்கைகளை வழங்கியுள்ளன,” என்று மேற்படி செவ்வியில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச ஆய்வு அறிக்கைகளின் நகல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டால் பாராட்டுவோம் எனக் குறிப்பிட்டு, 12 ஆயர்கள் மற்றும் இரண்டு உதவி ஆயர்களின் கையொப்பத்துடன் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அனுப்பியுள்ள கடிதத்தில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து தொகுதிகளையும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரால்ட் அந்தனியின் வேண்டுகோளுக்கு அமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து 88 தொகுதிகளும் 48,909 பக்கங்களும் ஏப்ரல் 20, 2023 அன்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், அருட்தந்தை ஹெரால்ட் அந்தனியிடம் ஒப்படைக்கப்பட்டன.” மேற்படி தொகுதிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆயர்கள் பேரவை கூறுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனியின் ‘Deutsche Welle’ ஊடக நிறுவனத்துடனான செவ்வியில், தான் கர்தினாலுடன் தொடர்பு கொள்ளப்போவதில்லை எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

திருச்சபையின் தலைமைத்துவத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் அந்த கருத்துக்கு பதிலளித்த இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, பேராயர் கர்தினால் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நபர் அல்லர் எனவும், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையுடன் முழுமையாக இணைந்த மற்றும் மிக முக்கியமான உறுப்பினர் எனவும் குறிப்பிட்டிருந்தது.