You are currently viewing சீன ஆராய்ச்சிக் கப்பலின் கோரிக்கை நிராகரிப்பு – நவம்பர்வரை பயணத்தை தாமதப்படுத்துமாறு வலியுறுத்து

சீன ஆராய்ச்சிக் கப்பலின் கோரிக்கை நிராகரிப்பு – நவம்பர்வரை பயணத்தை தாமதப்படுத்துமாறு வலியுறுத்து

சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலான ‘Shi Yan 6’ கப்பலை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை வருமாறு அறிவித்துள்ளோம் – என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

” இலங்கையில் முக்கியமான சில மாநாடுகள் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதேபோல பிரான்ஸ் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. எனவேதான் நவம்பரில் வருமாறு தெரிய்பபடுத்தியுள்ளோம்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

ஒக்டோபர் மாதமே குறித்த கப்பல் இலங்கை வரவிருந்தது. மாநாடுகள் காரணமாகவா அல்லது இந்தியாவின் அழுத்தம் காரணமாகவா தாமதித்து வருமாறு கோரப்பட்டுள்ளது என எழுப்பட்ட கேள்விக்கே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

” அழுத்தங்கள் இல்லை எனக் கூற முடியாது. எல்லா பக்கங்களிலும் அழுத்தங்கள் உள்ளன. பலம்பொருந்திய நாடுகளுக்கிடையில் போட்டி உள்ளது. இலங்கை கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்துள்ளது. எனவே, எல்லா விடயங்களையும் கருத்திற்கொண்டுதான் உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளுடனான நட்புறவு எமக்கு அவசியம்.

சீனாவுடனான நட்புறவும் எமக்கு முக்கியம். நாம் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. நவம்பரில் வருவதற்கான வாய்ப்பையே வழங்கியுள்ளோம். சுதந்திர நாடு என்ற அடிப்படையில் அதற்கான சுதந்திரம் எமக்கு உள்ளது.

இந்து சமுத்திர வலயம் சமரச வலயமாக இருக்க வேண்டும், இதனை பிரதான விடயமாக கருதியே இலங்கை செயற்படும். இலங்கை அணிசேரா கொள்கையை கடைபிடிக்கும் நாடாகும். இந்தியாவுடனான உறவும் எமக்கு முக்கியம். நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியா உதவியது. மேற்குலக நாடுகளுடனான உறவும் முக்கியம்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒக்டோபர் மாத இறுதியிலாவது அனுமதி வழங்குமாறு சீன தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதனை இலங்கை ஏற்கவில்லை.