உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என கூறிவந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். சர்வதேச பங்களிப்புடன்தான் விசாரணை அவசியம் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய சஜித் இவ்வாறு குறிப்பிட்டார்.
” கத்தோலிக்க திருச்சபைக்கும், பேராயருக்கும் இடையில் கருத்து முரண்பாடு உள்ளது என வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எந்தவொரு கருத்து முரண்பாடும் இல்லை என அருட்தந்தை எரல் அந்தணி குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உடன் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. இதனை அமுலாக்குவதில் ஏன் இழுத்தடிப்பு?” எனவும் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கதான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்போது பதவிக்கு வந்த பின்னர் அவரின் நிலைப்பாடு மாறியுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏன் அமுல்படுத்தப்படாமல் உள்ளது? சனல் – 4 காணொளி தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையில் நம்பிக்கை இல்லை. அதேபோல உள்ளக விசாரணை தொடர்பிலும் நம்பிக்கை இல்லாமல்போயுள்ளது. தேசிய பொறிமுறை ஊடாக, எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம் என்றே நானும் வலியுறுத்திவந்தேன். எனினும், உள்ளக விசாரணை தொடர்பில் தற்போது எனக்கும் நம்பிக்கை இல்லை.
மதத் தலைவர்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம், அது பாவச்செயலாகும்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கவும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணை அவசியம். அதற்கு சர்வதேச பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். எனவும் சஜித் குறிப்பிட்டார்.