You are currently viewing நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள்

நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ் நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழுவாலேயே இதற்கான நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சட்டமூலத்தில் நிகழ் நிலை காப்பு தொடர்பான ஆணைக்குழுவை நியமித்தல் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள், நிறைவேற்று அதிகாரம் மேலும் தன்னிச்சையாக செயல்பட வழிவகுக்கும், நீதிமன்றத்திற்குப் புறம்பான விசாரணை,தண்டிக்கும் அதிகாரம் போன்றன சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவிற்கு உள்ளபடியால்,இதில் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றது.

எனவே, இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருன்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெலிகம மாநகர சபையின் முன்னாள் தவிசாளர் ரெஹான் ஜயவிக்ரம ஆகியோரால் இது தொடர்பான மனு இன்று (4) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் ஆஜரானார்.

அதேவேளை, உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் உட்பட மேலும் சில அமைப்புகளும், தனி நபர்களும் இச்சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது. நேற்றிலிருந்து 14 நாட்களுக்குள் அச்சட்டமூலத்தை ஆட்சேபிக்க மக்களுக்கு வாய்ப்பு உள்ளது.