You are currently viewing நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு

” இலங்கை சர்வதேசத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கின்றது, (நிகழ்நிலை ) இப்படியான சட்டங்களை இயற்றினால் அடுத்து தூக்கு மேடைதான் ….” – என்று எதிரணி பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வேளையில் எழுந்த லக்‌ஷ்மன் கிரியல்ல, மேற்படி சட்டமூலத்துக்கு பிரதான எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

” இந்த சட்டமூலத்துக்கு சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. தற்போது சர்வதேசத்தில் குற்றவாளி கூண்டில்தான் நாம் (இலங்கை) நிற்கின்றோம், இந்த சட்டம் வந்தால் அடுத்து தூக்குதான். கடந்த முறை ஜெனிவா கூட்டத்தொடருக்கு நீதி அமைச்சர் சென்றார், இம்முறை செல்லவில்லை. நிலைமை அப்படிதான் உள்ளது.

தொலைதொடர்பு என்பது ஊடக அமைச்சருக்குரியது. அதனை ஏன் பொலிஸ் அமைச்சர் தாக்கல் செய்ய முடியும். அப்படியானால் தொலை தொடர்பையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டனர் போலும்.” – என சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ” இவர்களின் (நல்லாட்சி) ஆட்சிகாலத்தில்தான் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது, நீதி அமைச்சில் இருந்த சட்டமூலம், சிறு திருத்தங்களுடன் தற்போது எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. 2016 இல் சட்ட ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட ஆவணம்தான் இது.” – என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, இச்சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என்று சட்டத்துறை பேராசிரியரான ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அதேவேளை இச்சட்டமூலம் நீதிமன்றத்தில் சட்டரீதியாக சவாலுக்குட்படுத்தப்படும் என்று சட்டத்துறை பேராசிரியரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் என எதிரணிகளும், சிவில் அமைப்புகளும் சுட்டிக்காட்டிவருகின்றன. எனவே, மேற்படி சட்டமூலம் மீளப்பெறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றன.