” உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மனித உரிமை மீறலாகும். எனவே, அத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.” – என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
” உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்படுவதும், அதனை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதும் மனித உரிமையாகும். அரசமைப்பிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது மனித உரிமை மீறலாகும். எனவே, உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மனித உரிமை ஆணைக்குழு இருக்கின்றது.” – என மேற்படி ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்து செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறாததால், அத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர், இதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மனித உரிமை ஆணைக்குழு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, சமூக ஊடகங்கள் கண்காணிப்பு என்ற போர்வையில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சி இடம்பெறுமானால் அது பாரதூரமான விடயமாகும். இவ்விவகாரம் தொடர்பில் எமது பரிந்துரைகள் முன்வைக்கப்படும். – எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார்.