You are currently viewing நாடாளுமன்ற குழுக்களிலிருந்து அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

நாடாளுமன்ற குழுக்களிலிருந்து அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்றத்தில் இயங்கும் அனைத்து குழுக்களிலிருந்தும் இடைநிறுத்தும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது  எதிர்க்கட்சி தலைவரால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

” சட்டவிரோத சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகின்றது. எனவே, விசாரணை முடியும் வரை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்தும் யோசனையை முன்வைக்கின்றேன்.” என  சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அத்துடன், 3.3 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் கையடக்க தொலை பேசிகளை அவர்  சட்ட விரோதமாக கொண்டு வந்த போது 75 இலட்சம் ரூபாவே அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் பிரஜையொருவர் 80 மில்லியன் பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்தபோது 70 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.  

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைபட்டுள்ளனர். இது தொடர்பில் பல ஷரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர்  கேள்வி எழுப்பினார்.

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பாக சிக்கல்கள் உருவாகுவதினாலும் விசாரணை முடியும் வரை அவர் அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்தார். எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்ல இதனை வழிமொழித்தார்.

இதனையடுத்து இப்பிரேரணையை சபை ஏற்கின்றது என சபாநாயகர் அறிவித்தார்.