You are currently viewing நாட்டில் ‘சிஸ்டம்’ மாறுமா?

நாட்டில் ‘சிஸ்டம்’ மாறுமா?

நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லை. என்னை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம்கூட இதனையே பிரதிபலிக்கின்றது. – என்று நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த தாக்குதலை நடத்தியது யார், நபர்கள் யார் என்பதைவிடவும் நாட்டில் தற்போதுள்ள முறைமையால்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன்.” – எனவும் அவர் கூறியிருந்தார்.

அவரின் இக்கூற்றில் நியாயம் உள்ளது. எடுத்த எடுப்பிலேயே அதனை நிராகரித்துவிடவும் முடியாது.

ஏனெனில் நாட்டில் கடந்துள்ள 9 மாதங்களில் மட்டும் 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 42 பேர் பலியாகியுள்ளனர் .

அதேபோல நாட்டில் கொலை, கொள்ளைச்சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சிலர் சட்டத்தை கையில் எடுத்து செயற்படும் நிலைமையும் காணப்படுகின்றது. எனவே, நாட்டில் சட்டம், ஒழுங்கு அமுலில் உள்ளதா என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே.

” எமது நாட்டில் நிலவும் முறைமை தவறு என்பதை அனைவரும் அறிவார்கள். இது நாட்டு மக்களுக்கும் தெரியும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புரியும்.
எமது நாட்டில் சமூக முறைமையும் தவறு, அரசியல் முறைமையும் தவறு. இந்த தவறால்தான் நாடு இந்நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது விடயத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது. அந்த தவறை சரியாக அடையாளம் கண்டு, நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது விடயத்தில் மக்கள், அரசியல்வாதிகள் என இரு தரப்பும் செயற்பட வேண்டும். அந்த மாற்றத்தை கொண்டுவரும்வரை எம்மால் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. ” – எனவும் உத்திக எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.

இதுவும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும்.

நாட்டில் புலனாய்வு பிரிவு பலமாக இருக்கின்றதா என்ற வினாவும் எழுகின்றது. புலனாய்வு பிரிவு விழிப்புடன் இருந்திருந்தால் முன்கூட்டிய பல சம்பவங்களை தடுத்திருக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் நடைபெறும் சில குற்றச்செயல்களுக்கு அரசியல் அனுசரணை இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. எனவே, சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். அந்த சிஸ்டம் வந்தால்தான் இப்படியான குற்றச்செயல்களை தடுக்க முடியும்.