You are currently viewing தேர்தல்கோரி சர்வதேச நீதிமன்றம் செல்கிறது எதிரணி!

தேர்தல்கோரி சர்வதேச நீதிமன்றம் செல்கிறது எதிரணி!

” ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முற்படுமானால் நாட்டில் நிர்வாகக்கட்டமைப்பு முழுமையாக சீர்குலையும். சர்வதேச மட்டத்தில் எந்தவொரு சட்டப்பூர்வமான நகர்வுகளிலும் ஈடுபடமுடியாமல்போகும்.”

இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்கமாட்டோம். தேசிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்படும் என்பதுடன், சர்வதேசத்தையும் நாடுவோம். சர்வதேச நீதிமன்றம்கூட செல்வோம். இலங்கையில் சர்வாதிகாரி உருவாக இடமளிக்கமாட்டோம் எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருடம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான சூழல் அதுவல்லவெனவும், பொருளாதாரம் ஸ்தீரம் அடையும்வரை ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் இந்த கருத்து படுபயங்கரமாகும்.

இன்னும் இரு மாதங்களில் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால் உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்குகூட நிதி இருக்காது என்ற கோணத்திலும் அவர் கருத்து முன்வைத்திருந்தார். இது ஜனநாயகத்துக்கு விரோதமான கருத்தாகும்.

2024 ஒக்டோபர் மாதத்துக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நாட்டு சட்டம். 2024 நவம்பரில் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும்.

வஜிர அபேவர்தன கூறுவதுபோல் ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் என்ன நடக்கும்? 2024 ஒக்டோபருக்கு பின்னர் நாட்டில் சட்டவிரோத – அரசமைப்புக்கு முரணான ஜனாதிபதியே ஆட்சியில் இருப்பார். அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாமல்போகும்.

முப்படையினருக்கு எந்தவொரு கட்டளையையும் பிறப்பிக்க முடியாது, பலவந்தமாக ஆட்சியில் தொடரும் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவை படையினரால் செயற்படுத்த முடியாது. பொலிஸாருக்கும் கட்டளை பிரயோகிக்க முடியாது. சட்டவிரோத ஜனாதிபதிக்கு மக்களிடம் இருந்து வரி அறவிடமுடியாது. தூதுவர்களை நியமிக்க முடியாது. ஆளுநர்களையும் நியமிக்க முடியாது. இதனால் மாகாண மற்றும் உள்ளாட்சி நிர்வாகக் கட்டமைப்பும் சீர்குலையும்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, பரிள் கிளப் போன்றவற்றுடன் சட்டப்பூர்வமான நகர்வுகளை முன்னெடுக்க முடியாமல்போகும். சட்டப்பூர்வமற்ற ஆட்சியின்கீழ் மேற்படி அமைப்புகள் கொடுக்கல் – வாங்கல்களில் ஈடுபடாது. ” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.