You are currently viewing 13இல் இருந்து ஒத்திசைவு பட்டியல் நீக்கப்படுமா?

13இல் இருந்து ஒத்திசைவு பட்டியல் நீக்கப்படுமா?

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றம் அனுமதிக்கும் விடயத்தை மட்டுமே ஜனாதிபதி செயற்படுத்துவார்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” வடக்கு, கிழக்கில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு பணியகம், நல்லிணக்க அலுவலகம் என எனது அமைச்சின்கீழ் மூன்று நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் நடமாடும் சேவை என பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா போன்ற அரசியல்வாதிகள் அடிப்படைவாத நிலைப்பாட்டில் இல்லை. ஒரு சில எம்.பிக்களே 13 ஐ முழுமையாக அமுலாக்குமாறு கோரினர். ” இது சம்பந்தமான யோசனைகளை முன்வைக்கவும், அமுலாக்குவதா இல்லையா என்பது குறித்து என்னால் தீர்மானம் எடுக்க முடியாது, நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை செயற்படுத்துகின்றேன்” என ஜனாதிபதி இதற்கு பதிலளித்துள்ளார். இது நாடாளுமன்றத்துக்கு உரிய பணி, அனைத்து கட்சிகளும் இணக்கத்துக்குவரும் விடயத்தை எம்மால் செய்ய முடியும்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த 13 ஆவது திருத்தச்சட்டம் அரசியலுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது, அதற்காக போராடுகின்றோம் என வடக்கு அரசியல்வாதிகளால் அம்மக்கள் மத்தியில் கருத்து உருவாக்கப்படலாம். இந்தியாவிலும் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆட்சி அமைக்க தமிழக வாக்குகளும் அவசியம் என்பது பிரதமர் மோடிக்கு தெரியும். அதனால் அண்மையில் கச்சதீவை பற்றியும் அவர் கதைத்திருந்தார். இது பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒத்திசைவு பட்டியல் மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களை குறைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சில சட்டங்களையும் நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நாம் தீர்மானம் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் கலந்துரையாடியே முடிவெடுக்கப்பட வேண்டும்.” – என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply