You are currently viewing உள்ளக பொறிமுறைக்கு புலம்பெயர் இலங்கையர்களின் ஆதரவு கிட்டுமா?

உள்ளக பொறிமுறைக்கு புலம்பெயர் இலங்கையர்களின் ஆதரவு கிட்டுமா?

” இலங்கையர்கள் பிளவுபட்டு நிற்பதால்தான் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுகின்றது. எனவே, இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல டயஸ்போராக்கள் முன்வர வேண்டும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

நீதி அமைச்சர் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

” ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறும் தருவாயில், எமது நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது நாட்டுக்கு எதிராக பல சக்திகள் செயற்படுகின்றன. குறிப்பாக போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை டயஸ்போராக்களால் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.” எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்புகளும் முட்டிமோதிக்கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க முடியாது, அவ்வாறு முற்பட்டால் அது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவேதான் டயஸ்போரா தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.

இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பிரச்சினைகளை உள்நாட்டில் தீர்த்துக்கொண்டு, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, முன்னோக்கி செல்வோம் என அழைப்பு விடுத்துள்ளோம்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

” இலங்கையில் இன ஐக்கியம், நல்லிணக்கத்துக்காக பல வேலைத்திட்டங்களை அரசு முன்வைத்துள்ளது. காணாமல்போனார் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, இழப்பீட்டு பணியகம் செயற்படுகின்றது, நல்லிணக்க செயலணி உருவாக்கப்படும், இதற்கான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சனல் – 4 குறித்து விசாரணை

அதேவேளை, சனல் – 4 காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர்,

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு 29 மாதங்களுக்கு முன்னரே நீதி அமைச்சராக இருந்தபோது பயங்கரவாதம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் அரசுக்குள்ளேயே எனக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. உண்மையான பயங்கரவாதி நான்தான் என்றுகூட விமர்சித்தனர். இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு முற்படுவதாகவும் குறிப்பிட்டனர். இறுதியில் என்ன நடந்தது? உண்மை வென்றது?

எனது கூற்று தொடர்பில் உரிய வகையில் ஆராய்ந்து இருந்தால் தாக்குதலை தடுத்திருக்க முடியும். தகவலை வழங்கியவரையே சுட்டுக்கொல்லும் வகையில்தான் எனக்கு எதிரான நடவடிக்கை அமைத்திருந்தது. ஜனாதிபதி ஆணைக்குழுவும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளது, பிரதான சூத்திரதாரி உள்ளார் என்ற கருத்தை முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராதான் வெளியிட்டார். அதன்பின்னரே அக்கருத்து சமூகமயப்படுத்தப்பட்டது. அவர் சட்டமா அதிபராக இருக்கும்போது எதுவும் கூறாமல், ஓய்வு பெறும் நாளல் இந்த அறிவிப்பை விடுத்தார். தனக்கு அதிகாரம் இருந்த காலத்தில் உண்மையை கண்டறிய அவர் முற்படவில்லை.

அவரிடமிருந்து தகவல்களை பெறுவதற்கு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்கு முற்பட்டாலும் அதற்கு எதிராகவும் தடை உத்தரவு பெறப்படுகின்றது.

சனல் – 4 அல்ல எவர் தகவல் வழங்கினாலும் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றாவது விசாரணைகளை முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம்.” -என்று குறிப்பிட்டார்.

Leave a Reply