உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நகைச்சுவைத்தனமானது, திருடனின் அம்மாவிடம் மை பார்க்கும் கதைபோலவே அது அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.
அத்துடன், தேசிய மற்றும் சர்வதேசத்தை உள்ளடக்கிய வகையிலான சர்வதேச விசாரணையொன்றெ அவசியம் என அவர் நாடாளுமன்றத்தில் இன்று (6) மீண்டும் இடித்துரைத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் – 4 வில் வெளியாகியுள்ள காணொளி இலங்கை அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சிங்கள, பௌத்த தலைவரொருவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வைப்பதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
ஆனால் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணையே அவசியம் என சஜித் சபையில் நேற்று வலியுறுத்தினார். நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, விசாரிக்கும் திட்டம் உள்ளது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (6) மீண்டும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான உள்ளக விசாரணை நடக்கவில்லை என நாட்டு மக்கள் நம்புகின்றனர். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி அவசியம். இது விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நீதியை பெற்றுக்கொடுப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இத்தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும். விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன.
பிரதான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படாததால்தான் இன்று சர்வதேசம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எனவே, பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வெளிப்படையான விசாரணை அவசியம். உள்ளக விசாரணை தோல்வி கண்டுள்ளதால் தேசிய மற்றும் சர்வதேச பொறிமுறையை உள்ளடக்கிய வெளிப்படையாக விசாரணை அவசியம். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த சம்பவத்தின் அடி, முடி நிச்சயம் கண்டுபிடிக்கப்படும்.” – என்றார்.