You are currently viewing ’13’ முழுமையாக அமுலாவது சாத்தியமா?

’13’ முழுமையாக அமுலாவது சாத்தியமா?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறையாக்கம் செய்து, அதிலிருந்து முன்நகர்ந்து, நிரந்தரமான – நிலையான – நின்று நீடிக்கத் தக்க – நீதி, நியாயமான – தீர்வு ஒன்றை எட்ட முடியும்.

– இப்படித் திரும்பவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது.

அரசமைப்பின் 13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்
படுத்தும் கட்சிகளின் கருத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார். அதற்குத் தாம் அனுப்பிவைத்த யோசனைத் திட்டத்திலேயே இவ்விடயத்தை திரும்பவும் சுட்டிக்காட்டி இருக்கின்றார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.

இது ஒன்றும் அவர் புதிதாகச் சுட்டிக்காட்டும் விடயமே அல்ல. 1994 இல் நாடாளுமன்ற அரசியலுக்
குள் முனைப்பாக அவர் நுழைந்த காலம் தொடக்கம், கடந்த மூன்று தசாப்த காலமாக அவர் வலியுறுத்தி
வரும் மாறாத நிலைப்பாடுதான் இது. பெரும்பாலும் அந்த வலியுறுத்தலின் வாசகங்கள் கூட மாற்றமில்லாமல் அப்படியே நீடிக்கின்றன.

டக்ளஸ் தேவானந்தாவின் இந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்றுச் செயற்பட்டாவது இனப் பிரச்சினை
யைத் தீர்க்க இயலாதா என்று தென்னிலங்கை ஏங்கிய ஆதங்கப்பட்ட – ஒரு காலம் இருந்தது. அப்போது தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைப் பிரதிபலிக்கும் வலுவான சக்தியாக தமிழீழ
விடுதலைப் புலிகள் களத்தில் இருந்தனர்.

ஆயுதமேந்திப் போராடிய டக்ளஸ் தேவானந்தாபோன்றோர், நாடாளுமன்ற அரசியலுக்குத் திரும்பி,
மென்மையான குரலில், அமைதியாக – சாந்தமாக -இணக்கமான தீர்வொன்றுக்காக – இப்படி யோசனை
கூறிய போது, புலிகள் முன்னெடுத்த தீவிரமான யுத்தத்தின் குண்டு மற்றும் பீரங்கிச் சத்தங்கள், முழக்கங்கள், பேரழிவுகள் போன்றவற்றுக்கு மத்தியிலும் அந்த தீர்க்கமான குரல் தென்னிலங்கையின் காதுகளில்விழுந்தது. சர்வதேசத்தின் செவிப்பறையைக் கூடஎட்டியது.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. விடுதலை புலிகள் அழித்து ஒழித்து அடக்கப்பட்டு, இல்லாமலாக்கப்பட்டு விட்டனர். இதுவரை காலமும் சர்வதேசத்தின் காதில் ஓங்கி ஒலித்த தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கான கோரிக்கைக் குரல் யுத்தம் அடங்கியதும் – தமிழர் தரப்பு
ஆயுதப் போராட்டத்தில் அடக்கப்பட்டதும் – சர்வதேசத்தின் காதுகளிலும் விழவில்லை. தென்னிலங்
கையின் சிந்தனையையும் சிரத்தையையும் கூட எட்டுவதா கவும் இல்லை.

அமைச்சர் டக்லஸ் கூறுவது போல 13 ஆவதுதிருத்தத்தின் முழுமையான நடைமுறையாக்கத்தில்
இருந்து முன்நகர்ந்து, படிப்படியாக முன்னேறி, நிரந்தரமான – நிலையான – நீடித்த – நீதி, நியாயமான – தீர்வைக் காணும் எண்ணமும் தென்னிலங்கைக்குப் போய் விட்டது.