You are currently viewing ’13’ ஐ அடிப்படையாக வைத்து அரசியல் தீர்வைக் காண்போம் – டிலான் அழைப்பு

’13’ ஐ அடிப்படையாக வைத்து அரசியல் தீர்வைக் காண்போம் – டிலான் அழைப்பு

அரசமைப்பில் இருந்து 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகள் எழக்கூடும். எனவே, 13 ஐ அடிப்படையாகக்கொண்டு அரசியல் தீர்வு நோக்கி பயணிக்க வேண்டும் என்று டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

” 13ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அன்று முதல் இன்றுவரை அதனை நான் ஆதரித்துவருகின்றேன். வடக்கு, கிழக்கு மாகாணம் இணைந்திருந்தவேளை காணி அதிகாரம் தொடர்பில் எனக்கு கவலை இருந்தது. தற்போது அந்த கவலையும் இல்லை.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

” தற்போதைய சூழ்நிலையில் 13 ஐ அமுல்படுத்தாவிட்டாலோ அல்லது மாகாணசபை முறைமையை இல்லாதொழித்துவிட்டாலோ நாட்டில் தேவையற்ற பிரச்சினை எழும். எனவே, 13 ஐ அடிப்படையாகக்கொண்டுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும். இந்த முயற்சியின்போது அரசியல் ‘கேம்’களுக்கு இடமளிக்க கூடாது. ” எனவும் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டத்தை வைத்து சிலர் அரசியல் நடத்துகின்றனர், இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலாவது நடத்தப்பட வேண்டும்.” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.