” அரசியலமைப்பில் ஏற்கனவே 36 ஆண்டுகளாக இருக்கும் ’13 ஐ’ பொலிஸ் அதிகாரப் பிரிவை நீக்கி அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் அது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக இருக்க முடியாது.” – என்று மாவை சேனாதிராஜா அறிவித்தார்.
மாவை சேனாதிராஜா, தமிழர்களின் விடுதலைக்கான அரசியற் பயணத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர். இளைஞராக இருந்த காலத்தில் அரசியற் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
இலங்கை இந்திய, சர்வதேச அரசியல் தலைவர்களுடனும் இராஜதந்திர வட்டாரங்களிலும் அறிமுகமானவர். எஸ்.ஜே.வி. செல்வநாயம், ஜீ.ஜீ. பொன்னம்பலம், அமிர்தலிங்கம், பிரபாகரன், சம்பந்தன் ஆகிய தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். பல அரசியல் நெருக்கடிகளின் ஊடாகப் பயணித்த மாவை சேனாதிராஜா , இலங்கை நாடாளுமன்றத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் செயற்பட்டிருக்கிறார். தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் அவர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வரும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளைப் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு பழுத்த ஜனநாயக ரீதியில் ஆற்றல், அறிவு கொண்ட அரசியல் தலைவர். 2005 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர். அத் தேர்தலில் இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அரசியலமைப்பினால் தீர்வுகாண வேண்டுமென அறிவித்துப் போட்டியிட்டவர். இரண்டு இலட்சம் வாக்குகள் மேலும் பெற்றிருந்தால் ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருப்பார். ஆனால் தமிழ் மக்கள் வாக்களிப்பை பகிஷ்கரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதால் ரணில் வெற்றி பெறவில்லை. சிங்கள மக்கள், பெருமளவில் சமஷ்டி அரசியலமைப்பை அறிவித்திருந்த வேட்பாளர் ரணிலுக்கு வாக்களித்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை இலங்கையும் தமிழ் மக்களும் இழந்து விட்டனர். தற்பொழுது அவரும் ஐ.தே. கட்சியும் சென்ற பொதுத் தேர்தலில் அவ்வளவு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்காத பிளவுபட்ட ஐ.தே. கட்சியின் தலைவர். ராஜபக்சக்களின் ஆட்சி சிங்களப் பொது மக்களின் கிளர்ச்சியினால் வீழ்த்தப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க தன்னந்தனியான ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுதும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆதரவுடன் பிரதமராகி 134 வாக்குகளை நாடாளுமன்றத்தில் பெற்று, ஜனாதிபதியாகியுள்ளார். தற்போதைய நிலையில் தமிழினப் பிரச்சினைக்கு ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வு நிறைந்த சமஷ்டி அரசியலமைப்பின் தீர்வொன்றை ஏற்படுத்த முடியும் என்பது பெருங் கேள்வியே. அவ்வாறு ஒரு தீர்வு ஏற்படுமானால் அதுவும் ஆச்சரியமே.
கேள்வி : 13 ஆவது திருத்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்தினால் அதில் வரையறுக்கப்பட்ட அளவிலான பொலிஸ் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றிருக்கும்போது, அதை வலியுறுத்திக் கூறுவது இனவாதிகளை உற்சாகப்படுத்தி விடுவதாக அமையுமல்லவா?
பதில்: 13 ஆவது அரசியலமைப்பு விதியில் பொலிஸ் அதிகாரப் பகிர்வை விட்டு ஒரு தீர்வை ஏற்படுத்தலாமா என்று பரீட்சித்துப் பார்க்கிறார் ரணில். இம் முயற்சியை இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக ஏற்க முடியாது. இன்றுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வுக்கு இடமளிக்காது. ‘திவநெகும’ அரசியலமைப்புத் திருத்தம் பகிரப்பட்ட அரசியலமைப்பையும் திரும்பப் பெறுவதற்கேயுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஆட்சியொன்றினால் (மத்தியில் ஒற்றை ஆட்சியில்) அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை. புதிய சமஷ்டி அரசியலமைப்பினால் மாத்திரமே அதிகாரப் பகிர்வுக்கு இடமுண்டு. ஜனாதிபதி ரணில், 13 இன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை முன்வைக்க முயற்சிக்கின்றார். அதற்காக அரசியலமைப்புத் திருத்தமொன்றைக் கொண்டு வருவது பற்றியும் ஜனாதிபதி சிந்திக்கிறார் என்பதும் முரண்பட்ட ஒரு முயற்சியேயாகும். அரசியலமைப்பில் ஏற்கனவே 36 ஆண்டுகளாக இருக்கும் ’13 ஐ’ பொலிஸ் அதிகாரப் பிரிவை நீக்கி அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் அது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக இருக்க முடியாது. தமிழ்த் தேசிய இனத்திற்கு அரசியலமைப்பில் அதிகாரம் ஏதும் வழங்க சிங்கள-பௌத்த பேரினவாதம் இடமளிக்காது என்பதே உள்ள நிலைமை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.