You are currently viewing உள்ளாட்சிமன்ற சட்டமூலங்கள் – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிப்பு

உள்ளாட்சிமன்ற சட்டமூலங்கள் – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிப்பு

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பிரதேச சபைகள் (திருத்தம்)”, “நகர சபைகள் (திருத்தம்)” மற்றும் “மாநகர சபைகள் (திருத்தம்)” எனும் மூன்று சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்தச் சட்டமூலங்கள் மூன்றிலும் 2 ஆம் வாசகம், அரசியலமைப்பின் உறுப்புரை 1, 12(1), 82, 83 மற்றும் 104ஆ ஆம் உறுப்புரையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் இணங்காததுடன், “பிரதேச சபைகள் (திருத்தம்)”, “நகர சபைகள் (திருத்தம்)” மற்றும் “மாநகர சபைகள் (திருத்தம்)” எனும் இந்த மூன்று சட்டமூலங்களும் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டு அரசியமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கிகரிக்கப்படுதல் வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார்.

இந்தச் சட்டமூலம் பொதுவாக கவனத்திற்கொள்ளும் போது, அதன் 2.3 மற்றும் 7 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் உறுப்புரையுடன் 12(1) இணங்காததுடன், சட்டமூலத்தின் அவ்வாசகங்கள் தற்பொழுது காணப்படும் விதத்தில் நிறைவேற்றுவதற்கு, அவை அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையிற்கு இணங்க பாரளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் வாக்குகளுடன் மாத்திரம் நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் கருத்தாகும் என சபாநாநயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

எனினும், சட்டமா அதிபர் தீர்மானித்த, உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற குழுநிலையின் போது சமர்ப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு சட்டமூலம் திருத்தப்படுமாயின், சட்டமூலத்தின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களின் இணக்கப்பாடின்மை நீங்கும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply