You are currently viewing அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி…!

அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி…!

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும்  இதற்க முன்னர் விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தான் ரணில் விக்ரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ச அல்லன் என்றும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு  தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தாம் விரும்புவதாகவும் அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது தனது நோக்கமல்ல எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு தாம் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் நாடாளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான  பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரங்கள் தவிர  பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும் எனவும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும்  ஏற்றுக் கொண்டால்  மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை தேவை எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள  உத்தேச சட்டமூலம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கான வரைவு அரசியலமைப்பிற்கு அமைவானதா என்பதை அறிய சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (ONUR) நல்லிணக்கத்திற்கான தேசிய செயற்திட்ட வரைவை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க   இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பணிப்பாளர்  நாயகம் நியமனத்தை தொடர்ந்தே உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதற்குரிய தரப்பினர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாக வழிக்காட்டல் வரைவுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான பிரதான பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும், அதற்குரிய சட்டம்  அமுல்படுத்தப்பட்ட பின்னர் உரிய முறையான  பொறிமுறை ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி தமிழ் எம்.பிக்கள் இங்கு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், எந்த விதத்திலும் வடக்கு கிழக்கை இணைப்பதற்கான ஏற்பாடோ அது குறித்த கலந்துரையாடல்களையோ அரசு  மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் நீதி  நிலைநாட்டும்  செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லையெனவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு அமைய வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான   சட்டமூலம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும்  அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 21,374 முறைப்பாடுகளில் இதுவரை 3,462 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஏனைய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இங்க  குறிப்பிடப்பட்டது.

காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு, காணாமல் போனோர் தொடர்பிலான முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தமிழ் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அது தொடர்பில் அவர்களிடத்திலுள்ள தகவல்களை உண்மையை கண்டறிவதற்கான இடைக்கால பொறிமுறைக்கான செயலகத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தினார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், எஸ். வியாலேந்திரன், எஸ். சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர், சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி. விக்னேஷ்வரன், அங்கஜன் இராமநாதன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். ஸ்ரீதரன், டி. சித்தார்த்தன், சாணக்கியன் இராசமாணிக்கம், தவராசா கலையரசன், கே. திலீபன், ஜி. கருணாகரன் உட்பட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்களும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply