இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நவீன அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்பதற்கு அவர்கள் இன்னமும் நில உரிமையற்றவர்களாக வாழ்வதே சிறந்த சான்றாகும்.
ஒரு தனிநபரோ அல்லது சமூகமோ தலைநிமிர்ந்து வாழ வேண்டுமெனில் நில உரிமையென்பது அத்தியாவசியமாகும். அந்த உரிமை கிடைக்கப்பெற்றால் மாத்திரமே நிச்சயம் அடுத்தக்கட்டம் நோக்கி நகர முடியும்.
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் மலையக மாற்றம், மறுமலர்ச்சி பற்றி இன்றளவிலும் பேச்சுகள் அடிபடுகின்றன. லயன் யுகத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற கோஷங்களும் எழுப்படுகின்றன.
மேற்கூறப்பட்ட விடயங்களை அடைய வேண்டுமெனில் முதலில் நில உரிமை கிடைக்கப்பெற வேண்டும். அரசுதான் வீடுகளை அமைத்துதர வேண்டும் என காத்திருந்தால் அடுத்த நூற்றாண்டிலும் லயன் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
எனவே, மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கினால் அம்மக்களில் 50 வீதமானோரால் நிச்சயம் தமக்கான தனியான இருப்பிடத்தை நிர்ணயித்துக்கொள்ள முடியும். ஏனையவர்களுக்கு அரசு சலுகை கடன்களை வழங்கலாம். நிதியமொன்றை அமைத்தால் உதவிகளை வழங்குவதற்கு ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்க பிரதான இரு கட்சிகளும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உறுதியளித்தன. அதற்கு மக்களின் ஆணையும் கிட்டியுள்ளது. எனவே, காணி உரிமையை மக்கள் பேசுபொருளாக மாற்ற வேண்டும். அதனை வலியுறுத்தியதாக போராட்டங்கள் இடம்பெற வேண்டும். விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெறுமனே ‘மாற்றம்’, ‘மறுமலர்ச்சி’ என கொக்கரித்துக்கொண்டிருந்தால் விடியல் என்பது எட்டாக் கனியாகவே அமையும்.
அதேபோல மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பயிரிடப்படாத நிலங்களும் அம்மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கான இணக்கப்பாடுகள்கூட எட்டப்பட்டுள்ளன. இதனை முதலில் வெல்ல வேண்டும். அதன்பின்னர் பெருந்தோட்டங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் இலக்கை அடைய வேண்டும். அதற்கேற்ற வகையிலேயே நகர்வுகள் இடம்பெற வேண்டும்.