முகநூல் பதிவு பகிர்வு : அரச அதிகாரியின் கைதைக் கண்டிக்கும் சுதந்திர ஊடக இயக்கம்

முகநூல் பதிவைப் பகிர்ந்த குற்றச்சாட்டில் காணி நில தீர்வுத்துறை அதிகாரி சமில இந்திக்க ஜயசிங்க கைதுசெய்யப்பட்ட சம்பவத்திற்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முகநூல் பதிவொன்றைப் பகிர்ந்தமை குறித்து விசாரிப்பதற்காக சமில இந்திக்க ஜயசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலானது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் குழப்பதை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த குறித்த பதிவை முகநூலில் பகிர்ந்ததாக குற்றஞ்சுமத்தி தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கைது தன்னிச்சையானதும், பலவந்தமானதும் என சமில ஜயசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், தனது தொலைபேசியை மட்டுமன்றி தனது மனைவியின் கையடக்கத் தொலைபேசியையும் சீ.ஐ.டி.யினர் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவமானது கருத்து தெரிவிப்பதையும், விமர்சிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரச அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் இருண்ட சமிக்ஞையாகவே பார்ப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

இது சைபர் குற்றச்சாட்டுப் பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் கருதப்பட வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

காணி நில தீர்வுத் துறையின் உதவி ஆணையாளராக பணியாற்றிய சமிலா ஜயசிங்க கடந்த 21ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

தண்டனைச் சட்டத்தின் 120ஆவது பிரிவின் கீழ் அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் தூண்டிய குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த அதிகாரி மே 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்பத்தப்பட்டதோடு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வேண்டும் என்று பொலிசார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

பொது அமைதியின்மையை காரணம் காட்டி, அரச ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு இதுபோன்ற காரணங்களைப் பயன்படுத்துவதாகவும், அரசாங்கத்தின் சிறந்த ஆட்சியை மேம்படுத்துவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பை இது அந்நியப்படுத்தும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான விமர்சனங்கள், கருத்து பகிர்தல்கள் நல்லாட்சிக்கு அவசியமாகும். இதேபோல், அரச ஊழியர்களுக்கு அரசியலமைப்பில் உள்ள அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க உரிமை உள்ளது என்றும் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply