இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 45ஆவது அமர்வில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று வரை பிற்போடப்பட்டது. கொவிட் நெருக்கடி காரணமாக இம்முறை அமர்வுகள் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்படுகிறது. 

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்த யோசனையொன்றை, ஐக்கிய இராச்சியம், ஜேர்மன், கனடா, வடக்கு மொசிடோனியா, மொன்டினீக்ரோ, மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ள நிலையில், பிரேரணை தொடர்பில் தமது நட்பு நாடுகளுடன் பேசி, ஆதரவு பெறும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா, நோபாளம், பங்களாதேஸ் ஆகிய தெற்காசிய வலய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை சாதமான பதிலையும் பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சீனா, ரஸ்யா, பிலிப்னன்ஸ், பாகிஸ்தான் ஆகுிய நாடுகள் விமர்சித்திருந்தன.

இந்த நிலையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பில் இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளின் மீதான வாக்கெடுப்புகளிலும் இலங்கைக்கு சார்பாகவே பாகிஸ்தான் வாக்களித்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய இராச்சியம் கொண்டுவந்த பிரேரணைக்கு, கனடா, ஜேர்மன், மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

பிரேரணையைத் தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, அங்கத்துவ நாடுகளுடன் பேசி, ஆதரவையும் திரட்டி வருகிறது. குறிப்பாக அரபு நாட்டுத் தலைவர்களுடன் இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நேரடியாக பேசி ஆதரவு திரட்டியுள்ளனர். இவற்றுக்கு சாதாகமான பதில்கள் கிடைத்துள்ளதாக இலங்கையின் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்தியாவின் ஒத்ழைப்பைப் பெற இருதரப்பும் முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது. 

மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை குறித்த விவாதமும் நடைபெற்ற நிலையில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் அங்கம் வகித்தாலும், ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் வாக்காளிக்க 47 நாடுகள் மட்டுமே தகுதிபெற்றுள்ளன.

இந்த நிலையில், இம்முறை இலங்கை குறித்து கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்த்து அதாவது இலங்கைக்கு ஆதரவு வழங்க 21 நாடுகள் இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் இராஜதந்திரத் தரப்புத் தகவல்கள் மூலம் அறியமுடிந்தது. சில நாடுகள் நடுநிலை வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் இந்த விவகாரத்தில் மௌனமாகவே இருக்கிறது.

Leave a Reply