IMG-LOGO
Home செய்திகள் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை

20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை

by V.A.K - Date : 2021-May-09
IMG
போலி பேஸ்புக் கணக்குகள் என்ற போர்வையில் மாற்றுக் கருத்து சிந்தனையாளர்களின் கருத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சுமார் 20 லட்சம் போலி பேஸ்புக் கணக்குகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரியான உரிமையாளர் இல்லாத கணக்குகளே இவ்வாறு இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியாகவே இதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போலி கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கான அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்திற்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து இதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்திருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்த பின்னர் இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகளின் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இளம் சந்ததியினரை பிழையாக வழிநடத்தும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தூண்டுவதற்கும் இவை வழி வகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போலி பேஸ்புக் கணக்குகள் என்ற போர்வையில் மாற்றுக் கருத்து சிந்தனையாளர்களின் கருத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: