" எமக்கு நிதி வேண்டாம், நீதியே வேண்டும்." என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
திருகோணமலை கப்பல்துறை பகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தினர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி அமைப்பின் தலைவி செபஸ்டின் தேவி ,
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத் தொடர் இடம் பெற்று வருகின்ற நிலையில் இம்முறை அங்கே சென்று குரல் எழுப்ப முடியாத நிலையில், இங்கிருந்து நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.
13, 14 வருடங்களாக எங்களுடைய பிள்ளைகளை தேடிக் கொண்டிருக்கின்றோம். இவர்கள் குறித்து இலங்கை அரசு எவ்வித தீர்வையும் பெற்றுத் தரவில்லை.
இரண்டு தடவைகள் நாங்கள் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு வருகை தந்து எங்களுடைய பிரச்சினைகளை கூறினோம். ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
இருந்த போதிலும் இம்முறை எமக்கு ஐநா மனித உரிமைகள் கூட்டத்திற்கு வருகை தர முடியாத நிலையில் அங்குள்ளவர்கள் எமக்கு ஐநாவிடம் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
இம்முறையாவது எமக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். எமக்கு நிதி வேண்டாம், நீதியே வேண்டும்" என்று குறிப்பிட்டார்.