IMG-LOGO
Home செய்திகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைக்க வேண்டும்!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைக்க வேண்டும்!

Date : 2022-Dec-08
IMG
" தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே நாம் நியாயமான தீர்வு என கருதுகின்றோம். இதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். " - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.  சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு -செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

" நாட்டுக்கான தேசியக் கொள்கை வகுத்தலின்போது வடக்கு, கிழக்கு மக்களின் பங்களிப்பு பெறப்படுவதில்லை. தெற்கில் உள்ள ஆளும் கட்சிதான்  அப்பணியை செய்கின்றது. இதனால் தேசியக் கொள்கை வகுத்தலின்போது வடக்கு, கிழக்கு செயற்பாடுகள் கவனத்தில் எடுக்கப்படுவது குறைவு." - எனவும் சித்தார்த்தம் சுட்டிக்காட்டினார்.

வடக்கை எடுத்துக்கொண்டால் மீன்பிடி மற்றும் விவசாயத்தில் உச்சம் தொட்டிருந்தது. போரால் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது போர் முடிவடைந்து 10 வருடங்களுக்கும் மேல் ஆகின்றன. எனினும், நிலைமை சீர்செய்யப்படவில்லை. எனவே, தேசியக் கொள்கை என்பது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் எனவும், தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே, நியாயமானதொரு தீர்வு - அதாவது சமஷ்டி அடிப்படையில் அந்த தீர்வு அமைய வேண்டும். முதலில் சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை பகிருங்கள். மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். அரசியலை கைவிட்டு இதற்கு அனைத்து எம்.பிக்களும் ஆதரவு வழங்க வேண்டும். இலங்கை முழுதும் சம உரிமையும், சமச்சீரான பொருளாதாரமும் இருந்தாலே நாடு மேம்படும் எனவும் சித்தார்த்தன் எடுத்துரைத்தார்.
Tags: