IMG-LOGO
Home செய்திகள் 'அதிகாரப் பகிர்வு' - மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை உருவாக்குமாறு யோசனை!

'அதிகாரப் பகிர்வு' - மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை உருவாக்குமாறு யோசனை!

Date : 2022-Nov-30
IMG
" மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை உருவாக்கி, அதற்கு அதிகாரப்பகிர்வு வழங்கினால் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும்."

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
 
" வடக்குப் பிரச்சினை, மாகாணசபைத் தேர்தல், அதிகாரப்பகிர்வு மற்றும் காணி விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் தற்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. நான் ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கில் மக்களுக்கு உரித்தான காணிகளில் 95 வீதத்துக்கும் மேல் விடுவித்தேன். தற்போது இரண்டு, மூன்று விகிதங்களே எஞ்சியுள்ளன.

மாகாணசபைகளுக்கான அதிகாரம், அதிகரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவந்தாலும், அது நடைமுறைக்கு வரவில்லை. எம்மை பொறுத்தமட்டில், மாகாணசபை முறைமைக்கும் கீழ்சென்றதொரு அதிகாரப்பகிர்வு அவசியம். அதாவது மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை உருவாக்கப்பட வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபை முறைமைக்கு மேலதிகமாக நிதி செலவளிக்க வேண்டியதில்லை. தற்போது உள்ள மாவட்ட அபிவிருத்திக்குழுவை, மாவட்ட அபிவிருத்தி சபையாக இயங்க வைக்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தலாம். பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். சண்டையிட தேவையில்லை.

இந்நாட்டில் மீண்டும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் ஒரு சில கருத்துகளை தூக்கிபிடிக்க வேண்டாம் என வடக்கு மாகாணத்திலுள்ள எம்.பிக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். சகோதரத்துவத்துடன் செயற்படுவோம்." - எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

" " மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஸ்தாபிப்பதற்கு நான் தயார். இது சம்பந்தமாக பேச்சு நடத்தப்படும்." என்று குறிப்பிட்டார். 
Tags: