IMG-LOGO
Home செய்திகள் அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுக்கு சர்வதேச தலையீடு அவசியம்!

அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுக்கு சர்வதேச தலையீடு அவசியம்!

Date : 2022-Nov-29
IMG
அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சுகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் வலியுறுத்தியுள்ளன.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக தமிழ்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திர தினத்துக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக சர்வக்கட்சி கூட்டத்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியுடன் நடத்தப்படவுள்ள பேச்சுகளுக்கு சர்வதேச தலையீடு அவசியமா என எழுப்பட்ட கேள்விக்கு தமது கட்சி - கூட்டணியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனும், கூட்டணியின் எம்.பி. மனோ கணேசனும் மேற்கண்டவாறு கூறினர்.

" சர்வதேச தலையீடு அத்தியாவசியம். இது வரலாறு எமக்கு கற்று தந்துள்ள பாடம். முழு நாட்டையும் சிங்கள, பௌத்த நாடாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. எனவே, ஏதோவொரு வடிவில் சர்வதேச தலையீடு அவசியம். அதனை தட்டிக்கழிப்பதற்கு ஜனாதிபதி முற்பட்டால் - தீர்வு திட்ட பேச்சுகள் ஆரம்பத்திலேயே குழம்பும்." - என்றார் மனோ.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட செல்வம் எம்.பி.,

" தந்தை செல்வா காலம் முதல் தோற்று போன பேச்சுகள்தான் இடம்பெற்றுள்ளன. ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச தலையீடு அவசியம். இந்திய தலையீட்டை நாம் கோருகின்றோம். நோர்வோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் நடுநிலை வகிக்கலாம். உள்ளக பொறிமுறை என்பது தோல்வி கண்டுள்ளது."   - என்றார்.
Tags: