IMG-LOGO
Home செய்திகள் 21 ஆவது திருத்தச்சட்டத்தை இயற்ற அமைச்சரவை அனுமதி!

21 ஆவது திருத்தச்சட்டத்தை இயற்ற அமைச்சரவை அனுமதி!

Date : 2022-May-23
IMG
அரசியலமைப்பின் 21 ஆவது  திருத்தச்சட்டத்தை வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கும், அதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

அரசமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்தை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.   

இதன்போது நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் தயாரிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அதனை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

இதன்படி, அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கூடியபோது, உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம், நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டது.

21 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய உத்தேச சட்டமூலம், நாடாளுமன்றத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள், கட்சிகளின் யோசனைகள் உள்வாங்கப்படும். 
அதன்பின்னர், திருத்தப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டம்,  அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும்.  

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனை உத்தேச சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநரின் நியமனம், அரசியலமைப்பு பேரவை ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 
Tags: