நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று (17) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
பிரதி சபாநாயகருக்கான தேர்வு முடிவடைந்த பின்னர், ஜனாதிபதிமீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணைமீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும் யோசனையை அவர் முன்வைத்தார். இதனை எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.
இதற்கு சபை முதல்வர் தினேஷ் குணவர்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டார். பிரிதொரு நாளில் இதனை விவாதத்துக்கு எடுக்கலாம், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, விவாதத்துக்கு எடுப்பதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தார்.
நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனைமீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதன்பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது யோசனைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 51 மேலதிக வாக்குகளால் யோசனை நிராகரிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.