இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா தடை செய்யப்படவுள்ளது. அத்துடன் ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
‘தேசிய பாதுகாப்பு’ ரீதியில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் கூறுகிறார்; இந்த அறிவிப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தில் உள்ள பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யப் போவதாகவும், ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகளை மூடப்போவதாகவும் அரசாங்கம் கூறுகிறது. சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை பாதிக்கும் அண்மைய செயற்பாடுகள் இவையாகும்.
இதற்கு புறம்பாக, மத தீவிரவாதம் தொடர்பாக செயற்படும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தப்போவதாகவும் அரசாங்கம் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுவோரை இரண்டு வருட காலம் தடுத்து வைப்பதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
ஒரு சில முஸ்லிம் பெண்கள் தங்களது முழு உடம்பையும் முகத்தையும் மறைத்து அணியும் புர்கா என்ற வெளிப்புற ஆடையை ‘தேசிய பாதுகாப்பு’ க்கு அச்சுறுத்தல் என்ற ரீதியில் தடை செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கான பத்திரத்தில் தான் கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டதாக பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் சரத் வீரசேகர ஊடகவியலாளர் மாநாடொன்றில் கூறினார்.
“எங்களது முன்னைய காலத்தில் முஸ்லிம் பெண்களும் சிறுமியரும் ஒரு போதும் புர்கா அணிந்ததில்லை. அது அண்மையில் உருவான மத தீவிரவாதத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. நாம் அதை கட்டாயமாக தடை செய்யப் போகிறோம்.” என்று அவர் கூறினார். புர்காவை தடை செய்யும் அனுமதியை வழங்கும் ஆவணங்கள்pல் தான் கைச்சாத்திட்டதாக அமைச்சர் கூறினார். எனினும் அது அமைச்சரவையிலும்;, அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட நாடாளுமன்றத்திலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அதே வேளை தேசிய கல்விக் கொள்கைக்கு முரணான வகையில் செயற்படும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் வீரசேகர கூறினார். “ எவரேனும் ஒரு பாடசாலையை ஆரம்பித்து அவருக்கு தேவையானவற்றை பிள்ளைகளுக்கு சொல்லித் தர இடமளிக்க முடியாது” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக அந்த ஜனாஸாக்களை தகனம் செய்யவேண்டும் என்று அரசாங்கம் கடந்த வருடம் உத்தரவிட்டிருந்ததையடுத்து தற்போது புர்கா மற்றும் மத்ரஸாக்கள் தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான மேற்படி தடை அமெரிக்கா மற்றும் சர்வதேச உரிமை அமைப்புகளின் கண்டனங்களையடுத்து இவ்வருட முற்பகுதியில் நீக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம் சமூகம் தொடர்ந்;து இலக்கு வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செயற்பாடுகள் இடம் பெறுவதாக ஸ்ரீன் ஷருர் என்ற இலங்கையின் சமாதான மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான சமூக செயற்பாட்டாளர் கூறுகிறார்.
இலங்கையின் தலைநகரமான கொழும்பில் இருந்து அல்ஜசீரா வுக்கு பேசிய ஷருர் “இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் இது ஒரு அங்கம். ஜனாஸாக்களை தகனம் செய்யும் கட்டாய கொள்கை மாற்றியமைக்கப்பட்ட நிலையில் தற்போது முஸ்லிம் சமூகத்தை தண்டிக்கும் வகையிலான வேறு பல செயற்பாடுகள் பற்றி எமக்கு கேள்விப்பட முடிகிறது. இவ்வாறான செயற்பாடுகள் பற்றி நாட்டிலுள்ள முஸ்லிம்களுடன் முன்னரே கலந்தாலோசிக்கப்படுவதில்லை. குறிப்பாக கொரோனா நோய்த் தொற்று காலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டமை பற்றி கூறலாம். இந்நிலையில் புர்கா மீதான தடை ஒரு அரசியல் பழி வாங்கும் செயற்பாடாக தோன்றுகிறது.” என்று ஷருர் மேலும் கூறுகிறார்
பௌத்தர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாட்டில் 2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 250க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து புர்கா அணிவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இது கலப்பு அபிப்பிராயங்களை ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம் பெண்கள் அவர்களது மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கும் உரிமையை இது மீறுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறினர்.
இந்நிலையில் 2019 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தீவிரவாதத்தை ஒடுக்குவதாக தான் வழங்கியிருந்த வாக்குறுதியை பின்பற்றும் வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சில ஒழுங்கு முறைகளை பிரகடனப்படுத்தினார்.
வெவ்வேறு இனங்களுக்கிடையில் வன்முறை அல்லது மத, இன அல்லது சமூக விரோத, தீய அல்லது பகைமை உணர்வுகளை தோற்றுவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் எவரையும் தடுத்து வைக்கும் விதிகளை அவர் பிறப்பித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த சட்டத்தை நீக்குமாறு உள்ளுர் மற்றும் சர்வதேச உரிமை அமைப்புகள் தொடர்ந்து கொழும்புக்கு கூறி வருகின்றன.
“இந்த சட்டத்தின் கீழ் எதைச் சொல்லும் எவரும் கைது செய்யப்படலாம். பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும் பிரச்சினைக்குரியது” என்று ஷருர் கூறுகிறார்.
இலங்கையில் இடம் பெற்ற 2019 தேர்தலில் ராஜபக்ஷவினால் தோற்கடிக்கப்பட்ட முன்னைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு பாரதூரமான கேடு விளைவிப்பதாகக் கூறி அதனை நீக்கப் போவதாக கூறியிருந்தது. ஆனால் அதை செயற்படுத்த தவறிவிட்டது.
இலங்கையில் உள்ள 22 மில்லியன் பேரில் 9 சத வீதத்தினர் முஸ்லிம்கள்;. சனத்தொகையில் 75 சத வீதத்தினர் சிங்கள பௌத்தர்கள் ஆவர். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஸ 2009 இல் 26 வருட கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற வகையில் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரிடையே மிகவும் பிரபலமானவர்.
எவ்வாறெனினும் யுத்தத்தின்போது அவர் மனித உரிமைகளுக்கு குறைந்த அளவே மதிப்பளித்து, அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளை ஒடுக்கும் வகையில் அவர்களை கடத்துவதற்கும் சட்டவிரோதமாக கொலை செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
செய்தி ஆதாரம்; அல் ஜசீரா மற்றும் செய்தி நிறுவனங்கள் / 13 மார்ச் 2021