இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் இன்று (26) நடைபெற்ற, ஆசியாவின் எதிர்காலம் (Nikkei) தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
ஜப்பானின் நிக்கேய் (Nikkei) செய்தித்தாள் 1995 முதல் ஆண்டுதோறும் மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டின் கருப்பொருள் 'பிளவுபட்ட உலகில் ஆசியாவின் பங்கு மீள்அர்த்தப்படுத்தல்' என்பதாகும்.
இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடாகும். தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை அதே ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 நோய்த் தொற்றினால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தமை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து பணம் அனுப்புவதில் ஏற்பட்ட வீழ்ச்சி, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் அதிக கடன் சுமையுடன் இணைந்த ஏனைய நிகழ்வுகளினால் பணவீக்கம் ஏற்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பொருத்தமான வேலைத்திட்டத்திற்கான அணுகுமுறைக்கு இணங்க, எமது கடன் வழங்குனர்களுடன் கலந்தாலோசித்து, வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் அபிப்பிராயத்துடன், இலங்கை ஏப்ரல் மாதத்தில் "கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவைத்தல்" தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்தது.
எவ்வாறாயினும், அத்தகைய தீர்வுகள் மூலம் செயற்படும்போது அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் இறக்குமதி போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு உடனடியாகத் தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜப்பான் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளியாகும். ஜப்பானில் இருந்து நிதியுதவி வழங்குவது தொடர்பாக நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் விரைவில் முடிவடையும் என நம்பப்படுகிறது. பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நட்பு நாடுகளிடமும் கேட்டுக்கொண்டார்.