IMG-LOGO
Home கட்டுரை பவுலினா சுபோதினி

பவுலினா சுபோதினி

Date : 2021-Dec-21
IMG

வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி பகுதியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு, தற்போது அரசியல் ரீதியில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நான் திருமதி தயாளராஜன் பவுலினா சுபோதினி தற்போது சாவகச்சேரி நகர சபை உறுப்பினராக இருக்கின்றேன்.

சமூகத்தில் அங்கீகாரம் இன்றி வாழ்க்கையை கொண்டு நடாத்துவதும் உதவி ஒத்தாசைக்கு நாதியற்ற நிலையில் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வது என்பது சகித்துக்கொள்ள முடியாத போராட்டமாக இருக்கின்றது. வறுமை கொடுத்த வலிகள், போராட்டம் ஏற்படுத்திய மாற்றங்கள், கடன் சுமை, என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் பாதாளத்தில் இருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை கொண்டு நடாத்துகின்ற நிலை காணப்படுகின்றது. ஐந்து சகோதரர்களுடன் பிறந்த எனது இளமைப் பருவம் வறுமையுடன் கூடிய காலமாகவே இருந்தது. சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தோடு கல்வியை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். கல்வியை தொடர முடியாத கவலை தொடர்ந்தும் வாட்டிக் கொண்டிருந்தது. எனது தந்தை கூலித் தொழிலாளியாக இருந்தபடியால் தங்குமிடமொன்றை அமைத்துக்கொள்வதற்கு கடன்பட வேண்டிய நிலை காணப்பட்டது.

 

வீடுகட்ட வேண்டும் என்ற நோக்கில் எனது தாயார் சீட்டுப் பணம் சேர்த்தார். அது பிற்பட்ட காலத்தில் குடும்பத்திற்கு பெரும் கடன் சுமையை ஏற்படுத்தியது. கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு வீட்டை விற்க வேண்டிய நிலையோடு எனது தாய் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் தொழிலுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ள போது கைக்குழந்தைகளோடு இருந்த என்னால் எனது ஐந்து சகோதரர்களையும் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பல போராட்டங்களுக்கு மத்தியில் கடன் சுமையிலிருந்து மீண்டெழுகின்ற போது பேரிடியாய் யுத்தம் எமது வாழ்க்கைத் திசையை மாற்றியது.

 

2000 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக நாம் இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். சுமார் இரண்டு வருடங்கள் முறுகண்டியில் இருந்தோம். அதன் பிறகு சொந்த இடத்திற்கு வந்து பார்த்த போது எமது வீடுகள் அனைத்தும் சேதமாக்கப்பட்டு காணப்பட்டது. கடன் சுமையும் வறுமையும் சமூகத்தில் உரிய அந்தஸ்த்து மறுக்கப்பட்டு காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாதர் சங்கங்களில் இணைந்து சமூகப் பணியில் ஈடுபட ஆரம்பித்தேன்.

 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் எமது சங்கத்தால் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருந்தது. எமது சமூகம் வாழ்வாதாரம், பொருளாதாரம், சுகாதாரம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். எமது சமூகத்தில் உள்ள பெண்கள் குறித்து அரசியல்வாதிகள் அக்கறை செலுத்துவது குறைவாக காணப்படுகின்றது. அரசியல் உயர் மட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதில்லை.

 

எமது சமூகத்துக்குள் சுகாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல்வேறு சீர்கேடுகள் காணப்படுகின்றன, இவற்றால் அதிகமான பெண்களும் யுவதிகளுமே பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுகின்றவர்களை அந்த பாதிப்பிலிருந்து காப்பற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றேன். அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களுடன் பாதிக்கப்படுகின்ற யுவதிகளை மீட்டெடுக்க காலத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அவர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கு கைத்தொழில் அதிகார சபையின் ஒத்துழைப்புடன் சுயதொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவும் வீடில்லாதவர்களுக்கு வீடமைத்துக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு செயற்பட்ட அனுபவம் எனக்கிருக்கின்றது. ஆயினும் எமது நகர சபை எல்லைக்கு அப்பால் செயற்பட எனக்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 

அரசியல் பிரவேசம் என்பது எதிர்பாராத ஒரு செயற்பாடாகவே கருத முடியும். அரசியல் குறித்தோ அரசியல் அனுபவமோ அல்லது அரசியலுக்கான முன்மாதிரியோ எனக்கில்லை. இந்த நிலையில் தான் இலங்கைத் தழிழரசுக் கட்சி சார்பில் 25 வீத பெண்களுக்காக பிரதிநிதித்துவப் பங்களிப்பில் அரசியலுக்குள் புகுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. நகர சபைத் தவிசாளர் ஒரு பெண் என்பதால் சவால்களையும் சிக்கல்களையும் எதிர்நோக்காது பயணிக்கக்கூடிதாக இருக்கின்றது. ஆயினும் தேர்தல் காலத்தில் நான் ஒரு கத்தோலிக்கத்தவராக இருந்தபோதும் எனது கத்தோலிக்க சமூகத்திடமிருந்து எனக்கு எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. ஆயினும் இன்று வரை என்னாலான அனைத்து சேவைகளையும் எனது சமூகத்திற்கு செய்து வருகின்றேன்.

 

வேட்பு மனுத் தாக்கல் செய்த போதும் கிராம சேவகரது பெயர்ப் பதிவின் போது ஏற்பட்ட ஒரு தவறினால் தேர்தலில் வெற்றி பெற்றும் பதவியேற்பில் சிக்கல் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு கட்சி அது குறித்து தலையிட்டு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டு தற்போது நகர சபை உறுப்பினராக இருக்கின்றேன். அரசியலுக்குள் புகுந்த சந்தர்ப்பத்தில் அரசியல் மேடைகளில் உரையாற்றுவதற்கு அச்சம் காணப்பட்டாலும் தற்போது அந்த நிலையில் இருந்து என்னை மேம்படுத்திக்கொள்ள முடியுமாக இருக்கின்றது.

 

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றாலும் உறுப்பினர் பதவி போனஸ் ஆசனமாக இருப்பதால் எனக்கான எனது மக்களுக்கான பங்கீட்டை பெற்றுக்கொள்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. தேர்தல் காலத்தில் பெயர் பதிவின் போது எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஒத்துழைக்காத சந்தர்ப்பத்தில் தான் எனது பெயர் உள்வாங்கப்பட்டது. பெண் வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் வேட்பாளர்களை இனங்காண்பதிலும் கட்சி பெரும் சிரமத்தை எதிர்நோக்கியது.

 

பிரச்சார களத்தில் இருந்த வேறு கட்சி உறுப்பினர்கள் இடைக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். பிரச்சார பணிகளின் போது இது போன்ற உறுப்பினர்களால் அச்சுறுத்தல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பின்னணியில் வெற்றி பெற்றாலும் சபையில் பிரதிநிதிதுவ உறுப்புரிமை கிடைத்திருக்கின்றது. ஆனாலும் பிரச்சார பணிகளில் ஈடுபடாத ஒருவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அவர் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போது வெற்றி பெற்று பின்னர் கோட்டா அடிப்படையில் உறுப்புரிமை வழங்கப்பட்டமையால், எனக்கு சுயாதீனமாக செயற்பட்டு மக்களுக்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. அபிவிருத்திப் பணிகளின் போது எனக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றமையால் எனது எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கின்றது.

 

பிரச்சாரத்தின் போது பிரச்சாரத்திற்கான நிதி கிடைக்காமையால் பெரும் சிரமம் இருந்தது. துண்டுப் பிரசுரங்கள் கட்சியால் கிடைக்கப்பெற்றாலும் ஏனைய செலவுகள் அனைத்தும் சொந்த நிதியிலிருந்தே செலவிட வேண்டிய தேவை இருந்தது. கைவசம் இருந்த நகைகளை அடகு வைத்தே அந்த நிதியை திரட்டிக் கொண்டோம். தேர்தல் காலங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என ஏற்கனவே வழங்கப்பட்ட பயிற்சிகளின் ஊடாக சில அனுபவங்கள் கிடைத்தன. பின்னர் சபை நடவடிக்கைகளின் போது தொண்டு நிறுவனங்களின் வழி காட்டல்கள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றது. நிதி ஒதுக்கீடு, மனு சமர்ப்பிப்பு, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சமர்ப்பித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய பயிற்சிகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றது.

 

சபையின் ஆரம்ப காலங்களில் புதிய உறுப்பினராக உள்வாங்கப்பட்ட போது எனக்கு எதுவும் தெரியாத நிலை காணப்பட்டது. வேலைத்திட்டங்கள் செயற்பாடுகள் என்பன குறித்த பூரண தெளிவு இருக்கவில்லை. ஆனாலும் உறுப்பினராக செயற்பட ஆரம்பித்த போது தான் பல்வேறு விடயங்களை என்னால் கற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. சபையின் ஒரு பெண் உறுப்பினர் மனுக்களை சமர்ப்பிக்கின்ற போது கட்சி பேத அடிப்படையில் அவற்றை எதிர்க்கக்கூடியவர்கள் சபையில் இருக்கின்றார்கள். பெரும்பாலும் பெண்கள் கொண்டுவருகின்ற மனுக்களை பெண் உறுப்பினர்கள் நிராகரிப்பது குறைவு. பெண் உறுப்பினர் ஒருவர் எமது சபையில் தவிசாளராக இருப்பதால் பெரும்பாலும் பெண் உறுப்பினர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுவது குறைவு என்றே குறிப்பிட வேண்டும். பெண் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போது சில ஆண்கள் அதனை குழப்புகின்ற செயற்பாடுகளும் இடம்பெறாமல் இல்லை.

 

சமூகத்தில் உள்ள பெண்களின் பிரதிநித்துவத்தை வளப்படுத்த தொடர்ந்தும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும். அத்தோடு மொழிப்பயிற்சி என்பது கட்டாயமான தேவையாக காணப்படுகின்றது. தொழில்நுட்ப அறிவும் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுமாக இருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். காரணம் நாம் அரசியலில் புகுந்த போது ஊடக, தொழில்நுட்ப அறிவு, உள்ளுராட்சி சட்ட திட்டங்கள் தொடர்பான அறிவு எமக்கு இருக்கவில்லை. ஆயினும் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய பயிற்சிகளினால் நாம் தற்போது மேம்பட்ட நிலையில் இருக்கின்றோம்.

 

எதிர்கால அரசியலை முன்னெடுப்பது என்பதற்கு பெரும் தடையாக இருப்பது நிதி தான். அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கில் அதற்கு தகுதியான பெண்களை இனங்காண்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அதேபோன்று தேசிய அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். வட்டார தேர்தல் முறை இல்லாமல் போனால் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துகின்ற முறை இல்லாமல் போகும். எனவே பெண்களுக்கு 25வீத பங்கீடு தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும்.

 

எனது கருத்துக்கமைய இம்முறை பாராளுமன்றத்திற்கு ஒரு தமிழ் பெண் உறுப்பினரும் தெரிவு செய்யப்படாமைக்கு முக்கிய காரணம் முன்னர் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பெண் உறுப்பினர்களுக்கும் உள்ளுராட்சி மன்ற ரீதியில் தெரிவான பெண் உறுப்பினர்களுக்கும் இடையே எந்தவித வலையமைப்போ தொடர்போ காணப்படாமை, பெண்களுக்கான வேலைத்திட்டங்களோ சேவைகளோ உரிய முறையில் செய்யப்படாமையுமே அவர்கள் மீளப் பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கு தேவையான வாக்குகளை பெண்களிடம் கிடைக்கப்பெறாமைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து.

 

பெண்கள் அரசியல் பங்களிப்பில் தயக்கம் காட்டக்கூடாது. அவர்களிடம் காணப்படுகின்ற அச்சமும் அசௌகரியங்களும் கலையப்பட வேண்டும். தங்களின் வீடுகளில் விடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் குறைக்கட வேண்டும். இதே போன்று அழுத்தங்கள் எனக்கும் இருந்தது பெண்களுக்கான அந்தஸ்த்து அதிகரிக்கப்பட்டு அவர்களின் வெற்றிக்கு சுற்றியுள்ளவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களிடம் விடுக்கின்றேன்.          

 

One Text Initiative நிறுவனத்தின் பெண் உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர்களது திறன் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது தயாரிக்கப்பட்டது - இவ் ஆவணத்தை வெளியிடுவதற்கு மேற்படி உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டது.

 

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *