கந்தையா கலைவாணியாகிய நான் 90 களில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து பிறந்த ஊரை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. மகிழ்வட்டவான் பாடசாலையில் எனது ஆரம்பக் கல்வியையும், கரடியனாறு மகாவித்தியாலத்தில் இடைநிலைக் கல்வியையும், சாதாரண தரம் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்திலும் கற்றேன். பின்னர் எதிர்கொண்ட இன்னல்கள் காரணமாக பல பாடசாலைகள் மாற வேண்டி ஏற்பட்டது. அதனால் எனது உயர்தரக்கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி ஏற்பட்டது. அக்கால கட்டத்தில் எனக்கு சுயதொழில் மீது இருந்த ஆர்வத்தினால் பல பயிற்சி வகுப்புக்களுக்குச் சென்று இறுதியில் தையல் பயிற்சியை தெரிவு செய்ததன் காரணமாக இன்று தையல் எனது வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கிறது.
நான் திருமணம் முடித்த போதும் 2006 இல் எனது கணவன் காணாமல் போனார். அத்துடன் நான் எனது தந்தையையும் இழந்தேன். இப்போது நான் எனது தாயாருடன் ஒன்றாக வசித்து வருகின்றேன்.
வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றேன். யுத்தகாலத்தில் எனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதோடு நானும் சிறையில் அடைக்கப்பட்டேன். நீண்ட போராட்டத்திற்கு பின் விடுதலையானேன். அதன் பின்னர் மக்கள் நலன் செயற்பாடுகளில் ஈடுபட்டேன். தற்போது உள்ளுராட்சி சபை உறுப்பினராக இருந்தாலும் பாராளுமன்றம் வரை சென்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது இலக்கு. ஏறாவூர் பற்று பிரதேச சபைக்காக ஆறுமுகத்தான் குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டேன்.
நான் படிக்கின்ற காலத்திலே சுயதொழிலில் ஈடுபட்டதன் காரணமாக, ஏழை மாணவர்கள் கல்விக்காக படும் அவஸ்தையை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. எனவே அவர்களின் கல்விக்காக சில விடயங்களைச் செய்ய ஆரம்பித்தேன். கோயில்களுக்கு நிதி உதவிகளை செய்ய ஆரம்பித்த போதும் கல்விக்கு உதவ வேண்டும் என்ற எனது ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களுக்கு உதவும் செயற்பாட்டை ஆரம்பித்தேன். தனியார் மற்றும் சமூக அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன்.
சமூகத்தில் பல பெண்கள் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறானவர்கள் வன்செயலில் பாதிக்கப்பட்டுள்ளதோடு மாத்திரமல்லாமல் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை இழந்த பல பேர் இருக்கின்றார்கள். கைக்குழந்தைகள் உள்ள பெண்கள் கூட வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்கள். அத்தோடு கணவனால் தாக்கப்பட்ட பெண்களும் இருக்கின்றார்கள்.
வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு உரிய தீர்வுத் திட்டங்கள் வழங்கப்படுகின்ற போதும் சில பெண்களுக்கு கிடைக்கின்ற உதவித் திட்டங்களை கணவன்மார் பெற்று அந்தப் பணத்தில் முழுமையாக சாராயம் குடிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். அப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்ற போது அது குறித்து கிராம சேவகரை அணுகி அந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கின்றேன்.
தற்போது ஜோசப் பரராஜசிங்கம் அமைப்பின் தலைவியாக இருப்பதோடு சூர்யா பெண்கள் அமைப்பு, விழுதுகள், எழுவாழ்வு அமைப்பு என பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றேன். அதில் கிழக்கு அபிவிருத்தி மையம் நடாத்தும் கிழக்கு மாகாணங்களில் வாழ்வாதாரம் இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் நிலை அறிந்து பல உதவிகளை அவர்களுடன் இணைந்து செய்து வருகிறேன். நான் கிராமிய பெண்கள் வலையமைப்பில் சேர்ந்து பல முன்னேற்றகரமான பயிற்சிகளைப் பெற்றதோடு தொடர்ந்து 4 வருடங்களாக அமைப்பில் இயங்கி வருகிறேன். அந்த அமைப்பின் சிறந்த பெண் அரசியல் தலைமைக்கான நற்சான்றிதழ் விருதினை 2018ஆம் ஆண்டு பெற்றேன். என்னுடைய செயற்பாடுகளை பிரதேச மட்டத்தோடு மட்டுப்படுத்தாமல் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். தேசிய ரீதியில் இடம்பெற்ற பேராட்டங்களில் நேரடியா௧ ஈடுபட்டிருக்கின்றேன்.
2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் திஸ்ஸவிதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் தொடர்பு கிடைத்ததோடு லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. கட்சி குறித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு அறிமுகமும் இல்லாத காலத்தில் தேர்தலில் போட்டியிட்டேன். தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி முக்கிய உறுப்பினராக செயற்பட்டு வருகிறேன். ஆயினும் எனது அரசியல் அறிமுகத்திற்குக் காரணம் சமசமாஜக் கட்சியாகும். அந்தக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு பயணிக்கின்ற காரணத்தால் நான் அவர்களின் கட்சியில் இருந்து வெளியேறினேன். எனது இனத்தின் மீதுகொண்ட பற்று மாத்திரமல்லாமல் எமது இனத்தின் அழிவுக்கு காரணமாக இருந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்க முடியாது என்ற காரணமும் ஒன்றாகும்.
பெண் அரசியல்வாதி என்ற வகையில் ஆண் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து பயணிக்கின்ற போது சில சந்தர்ப்பங்களில் அதிக கவலையை ஏற்படுத்துகின்றது. பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போது எம்மை ஒடுக்க வேண்டும் என்று செயற்படுகின்ற சில ஆண்களும் இருக்கின்றார்கள். போராட்டத்திற்கு மத்தியிலே எமது மக்களுக்கான சேவையை செய்ய வேண்டியுள்ளது. எவ்வாறான போராட்டத்தை சந்தித்தாலும் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
எமது அரசியலை முன்னெடுக்கின்ற போது பணம் தான் முக்கிய சவாலாக இருக்கின்றது. பணத்தை வைத்துள்ள அரசியல்வாதிகள் பணத்தையும் சாராயத்தையும் கொடுத்து அரசியல் செய்கின்றார்கள். கடந்த தேர்தலின் போது எனது வீட்டில் சாராயம் இருப்பதாக புகார் கொடுத்திருந்தார்கள். ஆனாலும் பொலிஸாரின் சோதனையின் போது அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
தேர்தல் பிரச்சாரங்களின் போது சமூக வலைத்தளங்களில் அவதூறான போலி செய்திகளை பதிவிடுகின்றார்கள். அச்சுறுத்தல் செயற்பாடுகள், இடையுறுகள், என பல்வேறு விடயங்களை எதிர்கொண்டுதான் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அண்மையில் கூட கேவலமான முறையில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்கள். பெரும் அவமானங்களை சந்தித்துக்கொண்டு இந்த அரசியலை செய்ய வேண்டியுள்ளதுடன் தற்கொலைக்கு தூண்டுகின்ற அளவிற்கு அவர்களின் செயற்பாடுகளும் இருக்கின்றன.
எனது அரசியல் பயணத்தின் போது சிறந்த சமூக செயற்பாட்டாளர் மற்றும் இரும்புப் பெண்மணி என இரண்டு விருதுகளுக்கு பாத்திரமாகியுள்ளேன். 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது வேட்பாளர் பட்டியலில் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளேன். வேட்பாளர் தெரிவின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட வைப்பதற்கு எமது ஊரிலே பாரியளவில் மக்களை திரட்டி கூட்டம் கூட்டப்பட்டு அங்கு ஒரு தேர்தலை நடாத்தி ஒரு முறுகல் நிலைக்கு பின்பே தெரிவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பணத்தையும் ஆட்பலத்தையும் வைத்தே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது. பல அவமானங்கள் மற்றும் எதிர்ப்புக்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டேன். இந்த சவால்களை வெற்றிகொண்டதன் காரணமாகவே பிற்பட்ட காலத்தில் தமிழரசுக் கட்சி என்னை இணைத்துக்கொண்டது.
அரசியல் விகிதாசாரத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் என பெண்களை ஏளனமாகப் பார்க்கின்ற ஒரு நிலை சபைகளுக்குள் காணப்படுகின்றன. நிதி ஒதுக்கீட்டின் போதும் மகளிருக்கான நிதிகள் ஒதுக்கப்படுவதில்லை. ஆண்களை மையமாக வைத்தே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என அனைத்துப் பெண்களும் ஒன்றாக இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்.
அரசியலை கையாள வேண்டிய வழிகள் தொடர்பில் வன்டெக்ஸ் மூலம் வழங்கப்பட பயிற்சிகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றது. அதன் மூலம் பல அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. பெண்களை தாக்குகின்ற பல சம்பவங்கள் இடம்பெறுகின்றது. கோரளைப்பற்று பிரதேச சபையில் அவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அத்தோடு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக பெண்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அத்தோடு மகளிர் சிறுவர் விவகாரம் மற்றும் மொழி ரீதியான பயிற்சிகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். அவ்வாறான பயிற்சிகள் நிச்சயமாக அவர்களை வழிநடத்தும்.
எதிர்வரும் காலங்களில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வரும் போது அதில் போட்டியிட வேண்டும் என்பதே என்னைச் சுற்றியுள்ள பலரது கோரிக்கையாக இருக்கின்றது. கட்சி அரசியலைப் பொறுத்தவரையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செல்கின்ற போது கட்சிக்கான வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்படும். கட்சி கட்டாயம் மகளிருக்கான ஆசனங்களை வழங்க வேண்டும் என்பதோடு கட்சியில் எனக்கும் ஆசனம் வழங்கப்பட வேண்டும். அதற்கான மக்கள் செல்வாக்கு கட்டாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். அத்தோடு தேசிய ரீதியில் செல்கின்ற போது பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகின்ற நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றேன். ஆணாதிக்கம் மேலிடாமல் இருந்தால் கட்சி அதற்குரிய நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
ஒவ்வொரு அரசியல் செயற்பாடுகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருப்பதால் அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றேன். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் எண்ண வேண்டும். அவர்கள் மீதான காட்புணர்ச்சி இல்லாமல் அவர்கள் செயற்ப்பட வேண்டும். ஏனைய கட்சிகளில் இருக்கின்ற பெண்களுக்கும் நான் ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கின்றேன். அதேபோன்று ஏனையோரும் ஒருவருக்கொருவர் ஆலோசனைகளையும் உற்சாகத்தையும் வழங்க வேண்டும்.
பெண்களின் அரசியலில் நிதியும், ஆண்களின் ஆதிக்கமும் பெரிய சவாலாக இருக்கின்றது. உயர் மட்டத்தில் இருக்கின்ற பெண்களை அரசியலில் புகுத்த வேண்டும் என்று நினைக்கின்ற சிலரும் இருக்கின்றார்கள். அடிமட்டத்தில் இருக்கின்ற பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படக்கூடாது என்று நினைக்கின்றவர்களின் சிந்தனைப் போக்கு பெரிய சவாலாக இருக்கின்றது. சமூகத்தோடு தொடர்பில் இருக்கின்ற பெண்களுக்கு கட்டாயம் அரசியல் அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும். அந்த சவால்களை உடைப்பதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் மக்கள் மயப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் ஒட்டுமொத்த சமூகத்துக்கான அரசியலோடு நான் இருக்க வேண்டும் என்பதோடு பெண்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது இலக்காக இருக்கின்றது. கஷ்டத்துக்கும் துயரத்திற்கும் மத்தியில் இருக்கின்ற மக்கள் அவற்றில் இருந்து விடுபட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது அரசியல் பயணத்தின் இறுதி ஆசையாக இருக்கின்றது.
One Text Initiative நிறுவனத்தின் பெண் உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர்களது திறன் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது தயாரிக்கப்பட்டது - இவ் ஆவணத்தை வெளியிடுவதற்கு மேற்படி உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டது.
Your email address will not be published. Required fields are marked *