IMG-LOGO
Home கட்டுரை கொரோனாவால் தடுமாறும் இந்தியா: இலங்கையை நெருங்கும் சீனா – அடுத்து என்ன நடக்கும்?

கொரோனாவால் தடுமாறும் இந்தியா: இலங்கையை நெருங்கும் சீனா – அடுத்து என்ன நடக்கும்?

by BBC - Date : 2021-May-26
IMG

கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.


கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. சிறிய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் இது தீவிரமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால், இந்த நாடுகளில் சீனா செய்துள்ள நிவாரணப் பணிகளின் வேகம், இந்த நாடுகளில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையின் நகரங்களில் உள்ள சாலைகள் வெறிச்சோடியுள்ளன. மே 25 வரை, மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன் அண்டை நாடுகளைப் போலவே, கடந்த ஆண்டு இலங்கையில் முதல் அலை சற்று தீவிரம் குறைந்தே இருந்தது. ஆனால் இப்போது கொரோனா தீவிரம், அந்நாட்டின் சுகாதார அமைப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

தற்சமயம், இங்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 3,000 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இது 1000% உயர்வு.

மிகச் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பும் ஆட்டம் காண்கிறது

இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பு, தெற்காசியாவில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள சுகாதார வசதிகள் அனைவரும் அணுகக்கூடியவையாகவும் இலவசமாகவும் உள்ளன. இருந்தும், 2 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தத் தீவின் மருத்துவமனைகள் தடுமாறத் தொடங்கியுள்ளன.

பொது மக்கள் சுகாதார நிபுணர் ஷஷிகா பண்டாரா பிபிசியுடனான உரையாடலில், “நோய்த்தொற்றின் தீவிரப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எங்களது திறன் ஒரு வரையறைக்குட்பட்டே உள்ளது. நிச்சயமாக எங்கள் சுகாதார அமைப்பு சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் தொற்றுநோய் மேலும் இன்னும் அதிகம் பரவாத வரை மட்டுமே, இந்த அமைப்பு சுமையின்றிச் செயல்பட முடியும்.” என்று கூறினார்.

இப்போது, இலங்கை அரசாங்கம் தொற்றுநோயைத் தடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

புதிய தொற்றின் மரபணு வரிசைமுறை போதுமான அளவு இங்கு அடையாளம் காணப்படவில்லை. அதே நேரத்தில் இங்கிலாந்தில் அதிகம் காணப்பட்ட கொரோனா வைரஸின் அதே திரிபுதான், இலங்கையில் வேகமாகப் பரவி வரும் தொற்றுநோய்க்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இலங்கையின் சுகாதாரக் கொள்கை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரவி ரணன் -எலியா போன்ற வல்லுநர்கள் கூறுகையில், B.1.617.2 (இந்தியாவில் காணப்படும் திரிபு) கூட இங்கு ஏப்ரல் மாதம் முதல், அதிக அளவு (50%-க்கும் அதிகமாக) பரவியுள்ளது என்று கூறுகிறார்கள்.

அரசின் மீது கோபத்தில் மக்கள்

இந்தியாவில், இந்தத் தொற்றுப் பரவல் மிகத் தீவிரமாக இருந்த மே மாதத் தொடக்கத்தில் கூட இரு நாடுகளுக்கும் இடையில் மக்களின் போக்குவரத்து தொடர்ந்து வந்துள்ளது.

இலங்கையிலும் ‘இந்தியா போன்ற நிலைமைகள்’ விரைவில் ஏற்படக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையிலும் போக்குவரத்தைத் தடை செய்ய, இலங்கை அரசாங்கம் பல வாரங்கள் வரை தயங்கியது.

ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடந்த போது, மக்கள் பலர் தங்கு தடையின்றி இங்குமங்கும் சென்று வந்ததும் பலருக்குக் கவலையளித்தது.

நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகத் தடுப்பூசி போடுவது தொடர்பாகப் புதிய சிக்கல்களும் இங்கு எழுந்துள்ளன.

தடுப்பூசி வழங்கல் இலங்கையில் தொடங்கியது, ஆனால் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசிக்கு, அந்நாடு, இந்தியாவிலிருந்து வரும் மருந்துகளைத் தான் சார்ந்திருந்தது. ஆனால் இந்தியாவில் நிலைமை மோசமடைந்து வருவதாலும், பொருட்களின் போக்குவரத்தை நிறுத்தியதாலும் தடுப்பூசி நிறுத்தப்பட்டது.

மே 19ஆம் தேதி நிலவரப்படி, மக்கள் தொகையில் ஆறு சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றிருந்தனர். அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி எப்போது வரும், இந்த மக்களுக்கு எப்போது இரண்டாவது டோஸ் கிடைக்கும் என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை உள்ளது.

உதவுவதில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளிய சீனா

ஆசியாவில் வல்லரசு நாடான சீனா ஏற்கனவே, இலங்கை உட்பட, இந்தியாவின் அண்டை நாடுகளில் நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ளது. நெருக்கடியான இந்த சமயத்தில் சீனா இலங்கைக்கு பெரிய அளவில் உதவி வருகிறது.

சீனா, தான் உருவாக்கிய தடுப்பூசிகள், பிபிஇ கிட், முகக் கவசங்கள், மற்றும் டெஸ்டிங் கிட்களை இலங்கைக்கு நன்கொடையாக அளித்து வருகிறது. அதன் இந்த முயற்சிகளுக்கு ‘ஃபேஸ் மாஸ்க் டிப்ளமசி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தடுப்பூசித் தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை, ஆனால் சீனாவும் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தக் குறைபாட்டைச் சமாளிக்க முயற்சிக்கத் தொடங்கியுள்ளன.

இலங்கைக்கு சீனா 11 லட்சம் சினோஃபார்ம் தடுப்பூசியை நன்கொடையாக அளித்துள்ளது. இதனால், நிறுத்திவைக்கப்பட்டிருந்த தடுப்பூசி வழங்கல் அங்கு மீண்டும் தொடங்க வாய்ப்பாகியுள்ளது. சினோஃபார்ம் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை விலைக்கு வாங்கவிருப்பதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

தொற்று நோய்களுக்கான தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் இலங்கைக்கு நல்ல அனுபவம் உள்ளது என்றும், ஆசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு கோவிட்-19 தடுப்பூசி குறித்து மிகக் குறைவான தயக்கமே இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக சீன மற்றும் ரஷ்யத் தடுப்பூசிகளைப் பற்றிய கவலை இருந்தது. நோய்த் தொற்று தீவிரமடைந்ததில் இப்போது அதிக அளவில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சீனாவின் பிடி இறுகக் கூடும் என்ற கவலை

தொற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா ஏற்கனவே நிதி உதவி செய்து வருகிறது.

இது இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும். இன்னொரு வகையில் கூற வேண்டுமானால், சீனாவின் பிடி இதனால் இன்னும் இறுகும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

நெருக்கடியான இந்த நேரத்தில், சீனா இலங்கைக்கு மட்டுமல்ல. நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுக்கும் உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நாடுகள் அதன் கனவுத் திட்டமான பெல்ட் மற்றும் சாலைத் திட்டத்தில் பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில், உள்கட்டமைப்பு மற்றும் பிற மேம்பாட்டு பணிகளை வலுப்படுத்த சீனா கடந்த பல ஆண்டுகளாகக் கோடிக் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகிறது. ஆனால் இலங்கையிலேயே சிலர் தங்கள் நாடு ‘சீனாவுக்கு விற்கப்படுகிறது’ என்று கருதுகின்றனர்.

முன்னதாக, சீனாவின் செலவில், சீன நிறுவனங்கள் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை உருவாக்கியிருந்தன. ஆனால் இலங்கை தனது கடனைச் செலுத்த முடியாத சூழலில், அத்துறைமுகத்தை சீனாவிடமே ஒப்படைக்க வேண்டியிருந்தது. இது குறித்து உள்ளூர்வாசிகள் கோபத்தில் உள்ளனர்.

கொழும்பு கடற்கரைக்கு அருகிலுள்ள கடல் நீரை அகற்றிப் புதிய நகரம் அமைக்கவும் இப்போது சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கைக்கு சீனாவின் உதவி அவசியம்

சீனா “String of Pearls” (முத்துச் சரம்) உத்தியின் மூலம் தெற்காசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது.

சீனாவின் இந்த சர்ச்சைக்குரிய கொள்கையை அதன் போட்டி நாடான இந்தியா சந்தேகத்துடனே பார்க்கிறது. ஆனால் இந்த நேரத்தில் இந்தியா தொற்றுநோயைக் கையாள்வதில் சிக்கித் தவிக்கிறது, இந்த விஷயத்தில் அது விசேஷமாக எதையும் செய்யக்கூடிய நிலையில் இல்லை.

அரசியல் ஆய்வாளர் அசங் அபேகுனாசேகர பிபிசியிடம், “சீனாவின் தடுப்பூசி இராஜதந்திரம் இலங்கையில் ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்பு இராஜதந்திரத்திற்கு மேலும் வலு சேர்க்கும். இது இலங்கையில் சீனாவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார்.

அதே நேரத்தில், டாக்டர் ரவி ரணன் – எலியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு இன்னும் சீனா தேவை என்றே கருதுகிறார். ஏனெனில் இது தொற்றுநோயை வென்றதையும் தாண்டி அதைச் சமாளிக்கத் தேவையான உபகரணங்களைப் பெருமளவில் தயாரிக்கும் நாடுகளில் ஒன்று என்பது இவர் கருத்து.

சீனாவின் ஊரடங்கு, தொடர்புத் தடமறிதல், சோதனை மற்றும் எல்லைகளை மூடல் உத்திகளை மேற்கோள் காட்டி அவர், “நாம் சீனாவிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதே பெரிய தவறு. நாம் இங்கிலாந்தைப் பார்த்துச் சூடு போட்டுக்கொள்கிறோம். ஆனால் நியூசிலாந்து போன்ற நாடுகள் கூட சீனாவின் வழியைப் பின் பற்றித் தான் இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன” என்கிறார்.

Source: BBC Tamil

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *