IMG-LOGO
Home கட்டுரை நளினா பிறேம்லால்

நளினா பிறேம்லால்

Date : 2022-Apr-25
IMG

சிறு பராயம் முதலே உதவி மனப்பான்மையுடன் பெற்றோரின் வழி காட்டலில் சமூக சேவைக்கு உள்வாங்கப்பட்ட நான் நளினா பிறேம்லால். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் நல்லூர் ஆனந்த வித்தியாலயத்தில் கல்வியைக் கற்றதோடு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைத்த போதும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அது தவற விடப்பட்டதோடு சிறுபராயம் முதலே பெற்றோருடன் சேர்ந்து சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட அனுபவங்கள் என்னிடம் ஏராளமாக இருக்கின்றன.

என்னுடைய தந்தை பிரதிப் பிரதேச செயலாளராக பணியாற்றியவர் தற்போது ஒய்வு பெற்றுள்ளார். நான் சிறு பராயத்திலே தாயை இழந்ததோடு இரண்டு சகோதரர்கள் இருக்கின்றார்கள். பிரதிப் பிரதேச செயலாளராக எனது தந்தை சேவையில் இருந்த காலத்திலே அவர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டார். அப்பின்னணியின் அடிப்படையில் நானும் கிராம மட்டத்திலே சிறுவர்களுக்கு தேவையானவற்றை பெற்றோரிடமிருந்து பெற்று அவர்களுக்கு வழங்கியிருக்கின்றேன். அத்தோடு கல்வி கற்கின்ற காலத்தில் சிறார்களுக்கு இலவச வகுப்புக்களை நடாத்துதல் முதல் தேவையான உதவிகளை செய்து வந்திருக்கின்றேன்.

உயர் கல்வியைத் தொடர்ந்து மகளிர் அமைப்புக்களுடன் சேர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் எனக்கிருக்கின்றது. பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததுடன் மாகாண சபை இருந்த காலப்பகுதியில் அவர்களிடம் சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு  செயற்பட்டுள்ளேன்.

எமது சமூகத்தில் உள்ள பெண்கள் வாழ்வாதார ரீதியிலான பிரச்சினைகளையே எதிர்நோக்குகின்றார்கள். அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் கடன் திட்டங்களின் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான செயற்திட்டங்களை முன்னெடுக்கவே பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொண்டு நிறுவனங்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றவர்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி தொடர்பாளராக இருந்திருக்கின்றேன்.

அத்தோடு பால்நிலை சமத்துவமின்மைப் பிரச்சினைகளை பெண்கள் பெரிதும் எதிர்நோக்குகின்றார்கள். அரசியலைப் பொருத்த வரையிலும் கூட பெண்களை மட்டமாக மதிக்கின்ற ஆண் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் வீடுகளிலும் வெளியிலும் பெண்கள் சமத்துவமில்லாமல் நடாத்தப்படுகின்ற சூழல் காணப்படுவதோடு அது தொடர்பில் அவதானம் செலுத்தவும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தகருடன் கலந்துரையாடி தேவையுடையோரை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுத்து சிறுதொழில் முயற்சியாளர்களை உருவாக்க முடிந்துள்ளது. அவர்கள் தற்போது எதோ ஒரு வகையில் அவர்களின் நாளாந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறியிருக்கின்றார்கள். இது வரையும் எனது சமூக செயற்பாடுகள் கிராமிய மட்டத்தோடு இருப்பதோடு அதை தொடர்ந்தும் வளர்க்க வேண்டும் என்றே ஆசைப்படுகின்றேன்.

இந்த நிலையில் தான் போர்க்காலத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டும் அவர்களது உரிமைகள் நசுக்கப்பட்டும் வந்ததுடன் அதற்கு எதிராக செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பாடசாலைக் காலத்தைத் தொடர்ந்து எமது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டதோடு எனது தந்தையும் அரசியல் கட்சியொன்று சார்ந்து இருந்த நிலையில் தான் எனது அரசியல் பிரவேசமும் அமைந்திருந்து. அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக இருந்தார்கள் என்பதை விட அரசியல் தெளிவு எனக்கு வீட்டிலிருந்தே கிடைத்தது என்பதே உண்மை.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியே அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். ஆனால் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் அரசியல் கட்சியிலே நான் உறுப்பினராக இருக்கின்றேன். எனது தந்தை தமிழரசுக் கட்சி உறுப்பினராக இருப்பதோடு கடந்த தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்தும் எனும் தொனியில் தேர்தல் நடைபெற்ற போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டேன். நான் தற்போது யாழ் மாநகர சபை உறுப்பினராக இருக்கின்றேன்.

வெளிநாடுகளில் இருக்கின்ற பெரும்பாலான எமது உறவுகளின் பெற்றோர்கள் இங்கு வாழ்கின்றார்கள். இந்த நிலையில் முதியோர் இல்லமொன்றை உருவாக்கும் நோக்கில் நான் சபையில் மனு ஒன்றை சமர்ப்பித்தேன். பெற்றோர் இருவரில் ஒருவர் தனியாக இருக்கின்ற போது அவர்கள் மன ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் எனவே அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் என்ற நோக்கிலே மகிழ்வனம் எனும் பெயரிலே முதியோர் இல்லமொன்றை ஸ்தாபிக்கின்ற நோக்கிலே மனுவை சமர்ப்பித்தேன். அவர்களுக்கு வருமானம் இருந்தாலும் தனிமை என்பது பெரிய சிக்கலாகவும் அவர்களுக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் இருந்தார்கள். அந்தப் பிரரேரணையை எமது சபையில் உள்ள ஒரு ஆண் எதிர்த்தார். முதியோர் இல்லமென்பது பாராம்பரியம் மீறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பெண் வேட்பாளர் என்ற அடிப்படையில் தேர்தல் களத்தில் என்னை அசௌகரியப்படுத்துகின்ற செயற்பாடுகள் இடம்பெற்றன. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு எதையும் செய்ய முடியாது என ஆண்கள் தெரிவித்த சந்தர்ப்பங்கள் ஏராளம். பெண்கள் அரசியல் செய்கின்ற போது பாரியளவில் சவால்களை எதிர்நோக்கியே மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. பொது மேடைகளில் குடும்ப விவரங்களை வெளியிட்டு விமர்சித்து கருத்து தெரிவிக்கின்ற பழக்கம் எமது ஆண் சமூகத்திற்கு மத்தியில் காணப்படுகின்றது. கட்சி அரசியல் என்ற வரும் போது ஒரே குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தன்மை இருக்கக்கூடும். எனது திருமணத்திற்கு முன்பு எனது கணவர் தொழில் பெற்றுக்கொண்ட விதத்தை பொது மேடையில் விமர்சித்த நபர்களும் இருக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் இன்றும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்.

எனது அரசியல் பயணத்தில் ஆரம்ப காலத்தில் அரசியல் ரீதியான தெளிவு இருந்தாலும் அரசியல் அனுபவம் பெரிதாக இருக்கவில்லை. தொகுதிவாரித் தேர்தல் மூலம் அந்த அனுபவம் கிடைத்திருக்கின்றது. மாணவப் பராயாத்தில் மேடைப் பேச்சுத் திறமை இருந்தாலும் அரசியல் ரீதியில் சவாலுக்கு சவால் விடுக்கின்ற தைரியம்  இருக்கவில்லை என்றே கூற வேண்டும். ஆனால் தற்போது அரசியலுக்கு உள்வாங்கப்பட்ட பின்னர் அந்த மன தைரியம் வளர்ந்திருக்கின்றது. தேர்தல் அனுபவத்தைப் பொருத்த வரையில் யாழ் மாநகர சபைக்கு ஏழாம் வட்டாரத்தில் போட்டியிட்டு தெரிவாகாத போதும் பட்டியலின் அடிப்படையில் சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றேன். எமது கட்சியில் உள்ள மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் மூலமே வேட்புமனு கிடைக்கப்பெற்றது. பல கட்சிகள் ஒன்றாக சேர்ந்தே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியே தற்போது உறுப்பினராக இருக்கின்றேன்.

மாநகர சபையைப் பொறுத்த வரையில் வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் விகிதாரசார பிரதிநிதி ஆகியோருக்கிடையில் பெரும்பாலும் வேற்றுமைகள் காட்டப்படவில்லை. எமது சபை முதல்வர் அந்த விடயத்தில் மிகவும் நிதானமாகவே நடந்துகொள்கின்றார். எனது அரசியல் பயணத்திற்கு முன்னர் தொண்டு நிறுவனங்களால் நடாத்தப்பட்ட தலைமைத்துவப் பயிற்சிகளில் பங்குபற்றியுள்ளேன். அந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிக்காத போது தற்போது வெளிப்படையாக எனது கருத்துக்களை தெரிவிக்கின்ற பயிற்சி எனக்கிருக்கின்றது.

தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்கான நிதி ஒத்துழைப்பு என்ற விடயத்தில் கட்சி ஒரு தொகைப் பணத்தை தந்தாலும் அது போதுமானதாக இருக்கவில்லை. ஆண் வேட்பாளர்கள் பெருமளவு நிதியை செலவு செய்து பிரச்சாரங்களை மேற்கொண்டமையால் அதற்கு இணையாக நானும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. மீதித் தொகை அனைத்தும் எனது தனிப்பட்ட பணத்திலேயே செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது. உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் மாநகர சபைக் கட்டளைச் சட்டம் நகராட்சி முறைகள் தொடர்பில் எனக்கு போதியளவு தெளிவு இருக்கவில்லை. ஆனால்  தற்போது அவை தொடர்பாக நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

அத்தோடு மாகாண அமைச்சின் ஊடாக நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் நடாத்தப்பட்ட பயிற்சிப்பட்டறைகள் என்பவற்றின் ஊடாக பல விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. பெண்கள் சபைகளில் எவ்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பது, மனுக்களை சமர்ப்பிப்பது, உரிமைகளை வென்றெடுப்பது என்பன தொடர்பில் அந்த பயிற்சிகளின் போது தெளிவுபடுத்தப்பட்டன. தேர்தல் காலங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் பயிற்சிகளை வழங்குகின்றார்கள். சபையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் சபை உறுப்பினர்கள் வெளியில் சம முறையில் சிநேகிதம் கொண்டுள்ளார்கள்.

ஆட்சி அமைத்துள்ள கட்சி அவர்களுக்கு தேவையான நிலையியற்குழு உறுப்புரிமைகளை பெற்றுக்கொள்வதோடு ஏனையோருக்கும் அதில் அங்கத்துவம் வழங்குகின்றனர். அனைத்து கட்சிகளும் விட்டுக்கொடுப்புக்களை செய்து குழுகளுக்கான தலைமைத்துவம் வழங்கப்படுகின்றன. அதனை அனைத்து உறுப்பினர்களும் ஏற்று செயற்படுகின்ற ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. அத்தோடு ஏனைய குழுக்களுக்குள்ளும் பெண்கள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு வருடாந்த பாதீடு ஒதுக்கீட்டின் போதும் நிதி சம அளவில் வழங்கப்படுகின்றன. அந்த நிதிகளைப் பெற்று மக்களுக்கு தேவையான மக்கள் பணிகளை செய்துகொண்டிருக்கினறோம். கம்பெரலிய திட்டத்தின் கீழ் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடிந்துள்ளது. எமது வட்டாரத்திற்கு சனசமூக நிலையத்திற்கு பார்வையாளர் அரங்கொன்றை இந்த திட்டத்தின் கீழ் நிர்மானிக்க முடியுமாக இருந்தது. அத்தோடு வீதி விளக்குகளையும் அமைக்கவும் முடியுமாக இருந்தது.

தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் பயிற்சிப் படறைகளை நடாத்த வேண்டும். அவற்றில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் படறைகளை நடாத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அத்தோடு கட்டளைச் சட்டங்கள் தொடர்பிலும் பெண் உறுப்பினர்களுக்கு தெளிவு கொடுக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் தேர்தல்கள் வருகின்ற போது எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் கட்சி எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டியவளாக இருக்கின்றேன். ஆசனப் பகிர்வு தொடர்பில் கட்சி மேற்கொள்கின்ற தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு கட்சி வேட்பு மனு வழங்குகின்ற போது தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கின்றேன். கட்சியால் ஏதேனும் விடயம் மறுக்கப்பட்டால் அது தொடர்பில் கலந்துரையாடி தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கை. தேசிய அரசியலில் பெண்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். அனுதாப அலை என்பதை விட அரசியல் ஆற்றலை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் ஈர்ப்பாக இருக்க வேண்டும்.

எனக்குப் பின் இந்த அரசியல் வெளிப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போது ஒரு சட்டத்தரணியை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்பதை பெருமையாக சொல்ல வேண்டும். பெண்கள் விமர்சனங்களுக்கு அப்பால்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் சுய நடத்தை சரியாக இருக்க வேண்டும். அரசியலுக்குள் வருகின்ற பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் சுய நடத்தையை வைத்தே முதலில் விமர்சிக்கப்படுகின்றார்கள். ஆகவே ஏனைய விமர்சனங்களை அச்சமின்றி எதிர்கொள்வதற்கு தனிப்பட்ட நடத்தை தொடர்பிலான விடயங்களில் பெண்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.

 

(One Text Initiative நிறுவனத்தின் பெண் உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர்களது திறன் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது தயாரிக்கப்பட்டது - இவ் ஆவணத்தை வெளியிடுவதற்கு மேற்படி உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டது.)

 

 

 

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *