You are currently viewing ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு? நாடாளுமன்றில் யோசனை!

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு? நாடாளுமன்றில் யோசனை!

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இது வைராக்கியத்தை வளர்ப்பதற்கான நேரம் அல்லவெனவும், சமாதானத்தை நோக்கி பயணிப்பதற்கான தருணம் எனவும் கூறினார்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மார்ச் (28) 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 2 குற்றப்பத்திரிகைகள் இரண்டிலும் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் வெவ்வேறாக விதித்த நீதிபதி, இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 50,000 ரூபா அபராதம் விதித்தார்.

தேரர் என்ற வகையில் தேசிய மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படக்கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் இன்று, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

“ கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தொடுத்த வழக்கில் அடிப்படையிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2016 இல் கூரகல பகுதியில் சம்பவமொன்று இடம்பெற்றது. பௌத்தர்களின் புராதன பூமியாக விளங்கிய அப்பகுதியை முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஆக்கிரமித்தனர். முஸ்லிம் மக்கள் அல்ல, அடிப்படைவாதிகளே இதனை செய்தனர் என்பதை கூறிக்கொள்கின்றேன். இந்த சம்பவம் பௌத்த மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தாதா? நான் ஞானசார தேரரை பாதுகாக்க முற்படவில்லை. எனினும், யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

அடிப்படைவாதிகளின் செயலால் அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, ஞானசார தேரர் வெளியிட்டிருந்த கருத்து மக்கள் மதனை புண்படுத்தி இருந்தால் அதுவும் தவறு. அதனை கண்டிக்கின்றோம்.

இன்று அடிப்படைவாதம் முடிந்துவிட்டது. ஐ.எஸ். அடிப்படைவாதம் இந்நாட்டில் தலைதூக்கும் என்பதை ஞானசார தேரரே முதலில் கூட்டிக்காட்டி இருந்தார். இது சமாதானத்தை நோக்கி பயணிக்க வேண்டிய காலம். பகைமைக்கு பதிலாக மன்னிப்பு பற்றி கவனம் செலுத்த வேண்டிய காலம்.
எனவே, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் அதனை மீளப்பெற வேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் வலியுறுத்தியுள்ளார்.