You are currently viewing இஸ்ரேலிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அரசா, எதிரணியா?

இஸ்ரேலிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அரசா, எதிரணியா?

இஸ்ரேல் நாட்டின் எதிர்க்கட்சியிடமிருந்து இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையின்போது அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும் எனவும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை இலங்கை அரசியலுடன் ஒப்பிட்டு கருத்துகளை முன்வைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன. ஊடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த இவர், பஸில் ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய நபராவார்.

” இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் – குறைந்தபட்ட பொது இணக்கப்பாட்டுடன் புதிய அமைச்சரவையுடன் அவசர அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காசாவில் மட்டுமல்ல இந்த பூமியில் இருந்தே ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். இஸ்ரேல் அரசு தனித்துவிடப்படவில்லை, எதிரணியும் உடன் உள்ளது என்ற செய்தி இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசின்கீழ்தான் தேசிய பிரச்சினைக்கு இஸ்ரேல் முகம்கொடுக்கின்றது.” – எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.

” இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை, இந்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி பதவியைதவிர அமைச்சரவையில் பிரதமர் உள்ளிட்ட ஏனைய பதவிகளை ஏற்று – குறுகிய காலத்துக்கு பொது இணக்கப்பாட்டு அரசை அமைக்க முன்வருமாறும் கோரினார். வாய்மூலம் மட்டுமல்ல எழுத்துமூலமும் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

ஆனால் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன இதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை.” என சுட்டிக்காட்டி, எதிரணிகளின் செயற்பாட்டை கடுமையாக சாடினார்.

” தேசிய பிரச்சினையொன்று ஏற்பட்டவேளை அரசியல் தியாகங்களுக்கு மத்தியில் அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை மேற்படி தரப்புகள் நிராகரித்தமை பாரதூரமான விடயமாகும். ஹமாஸ் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தும்வரை மொசாட் அமைப்பு தூங்கிக்கொண்டு இருந்ததா, ஜனாதிபதி பதவியை துறக்கவும், எங்கள் ஆட்சியில் செய்கின்றோம் என இஸ்ரேல் நாட்டு எதிரணிகள் கூறினவா? ஆனால் எமது நாட்டு கட்சிகள் அவ்வாறு கோரின. எனவே, இது தொடர்பில் எமது நாட்டு மக்கள் சந்திக்க வேண்டும். தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையின்போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” -எனவும் விரிவானதொரு பாடத்தை ஊடக சந்திப்பின்போது அவர் எடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கூற முற்படும் கருத்து சரிதான், ஏனெனில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின்போது, அரசியலுக்கு அப்பால் தேச நலன் கருதியே செயற்பட வேண்டும். உலகில் பல நாடுகளில் முக்கியமான கட்டங்களில் ஆளும் மற்றும் எதிரணிகள் இணைந்து அரசமைத்து – ஒன்றாக செயற்பட்ட பல சம்பவங்களை உதாரணம் காட்டலாம்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தின் மறுபக்கத்தை பார்க்க முன், வரலாற்று பக்கத்தையும் ஒரு தடவை தொட்டுவிட்டு வருவோம்.

இஸ்ரேல் வரலாறு

மத்திய கிழக்கு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒட்டோமான் பேரரசு முதலாம் உலகப் போரில் வீழ்த்தப்பட்ட பின், அந்த பகுதி பிரிட்டனின் ஆளுகைக்குக் கீழ் வந்தது.அதன் பின் அந்த பகுதியில் உள்ள பாலத்தீனத்தில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடியேறினர்.

பாலத்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, “தேசியப் பகுதி” ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனிடம் ஒப்படைத்தன. அப்போது தான் இந்தப் பிரச்னை தொடங்கியது.

யூதர்களைப் பொறுத்தவரை அந்தப் பகுதி அவர்களுடைய பூர்வீக மண்ணாக இருக்கிறது. ஆனால் பாலத்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர். யூதர்கள் அங்கு குடியேறியதற்கு, பெரும்பான்மையாக இருக்கும் அரபு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஐரோப்பாவின் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த யூதப் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 – 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது.

அதன் பின் யூதர்களுக்கும், அரபு மக்களுக்கும் இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன. 1947ஆம் ஆண்டு பாலத்தீனம் யூதர் பகுதி மற்றும் அரபு மக்களின் பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. அப்போது ஜெருசலேம் சர்வதேச நகரமானது.

இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு மக்கள் தரப்பில் இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரபு மக்கள் இத்திட்டத்தை அமல்படுத்தவும் இல்லை.

இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட முடியாமல் தவித்த பிரிட்டன் ஆட்சியாளர்கள், 1948ஆம் ஆண்டு அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். இதையடுத்து யூத தலைவர்கள் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவானதாக அறிவித்தனர்.

இஸ்ரேலும் – இலங்கையும்

இஸ்ரேலும் 1948 இல்தான் உதயமானது, இலங்கைக்கும் அந்த ஆண்டுதான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் இஸ்ரேல் இன்று எந்த நிலையில் உள்ளது, பலம் பொருந்திய பொருளாதாரம் உள்ளது, சிறந்த படை கட்டமைப்பு உள்ளது, மொசாட் என்ற சிறந்த உளவு பிரிவும் உள்ளது. தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடாகவும் இஸ்ரேல் விளங்குகின்றது.

இலங்கையோ வங்குரோத்து நிலையில் உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆட்சிமுறைமையே பிரதான காரணமாகும். 75 வருடகாலம் இந்நாட்டை ஆண்டவர்கள் எடுத்த சில தவறான முடிவுகளால்தான் நாடு இந்நிலைமைக்கு வந்துள்ளது. எனவே, முதலில் அரசியல் சிஸ்டம் மாற வேண்டும். மக்கள் போராட்டத்திலும் இவ்விடயமே எடுத்துரைக்கப்பட்டது.

கோட்டாவை மக்கள் வேண்டாம் என்றனர், புதிய அரசையே கோரினர். ஆக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் அவரால் முன்னெடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளுக்கு எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்கி இருக்க வேண்டும் எனக் கூறப்படுவது சுயநல அரசியலின் வெளிப்படாகும்.

போர்காலத்தில் அவசரகால சட்டம் நீடிப்பு உள்ளிட்ட விடயங்களின்போது அரசு முன்னெடுத்த விடயங்களுக்கு இந்நாட்டில் உள்ள எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளன. ஆனால் ஆட்சி கட்டமைப்பு சாக்கடையாக உள்ள நிலையில், அதனை சுத்தம் செய்யாமல், அதில் இறங்கி பயணிக்க அழைப்பது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது.

இஸ்ரேலில் தேச நலனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது, அதற்கேற்ற வகையிலேயே கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இங்கு தனிநபர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசமைப்பே மாறும் நிலை காணப்படுகின்றது. இந்நிலைமைமாறும்வரை எப்படிதான் மாற்றம் வரும்? எப்படி ஆட்சி செய்ய வேண்டும், எவ்வாறு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இலங்கையில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் இஸ்ரேலிடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தால் அது ஏற்புடையதாக இருந்திருக்கும்.

எமது நாட்டில் உள்ள சிஸ்டம் மாறினால் நிச்சயம் இலங்கையும் முன்னேறும்.