You are currently viewing சமஷ்டி கோரிக்கை நியாயமானதா?

சமஷ்டி கோரிக்கை நியாயமானதா?

தமிழ்த் தேசிய அரசியலில், அண்மைக் காலமாக முக்கியமான ஒரு விடயம் உணர்வுபூர்வமான அம்சமாகப் பேசப்படுகின்றது. அது 13 ஆவது அரசமைப்புத்திருத்தம் அல்லது அதன் முழுமையான நடைமுறை யாக்கம் என்பதாகும்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் சமஷ்டிஎன்ற இரண்டு தளங்களுக்கு இடையில் தெளிவான- வரையறையான – கோடு இழுக்கப்பட்டு, இந்த
இரண்டும் தமிழ் தேசிய அரசியல் மட்டத்தின் பிரதான பேசுபொருள்களாகி இருக்கின்றன.

இந்த வரையறைப் பிரிப்புக்கு ஒரு பக்கத்தில் -சமஷ்டி மட்டுமே என்ற பக்கத்தில் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தரப்புகள் தெளிவான நிலை எடுத்து நிற்கின்றன.

சமஷ்டி பற்றி வாய்ப்பந்தல் பேச்சு பேசினாலும், அரசமைப்பின் 13 வது திருத்தம் என்ற பக்கத்தில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி, விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்றவை நிலையெடுத்துள்ளமை தெளிவு.

பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டியை வலியுறுத்தினாலும் – அதை விட்டுக் கொடுக் காமல் – அதற்கு கீழ் சமரசம் செய்யாமல் – 13 ஐயும் சமஷ்டியையும் பிரிக்கும் கோர்ட்டில், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இல்லாமல் நிற்கின்றது.

13 ஆம் திருத்த பக்கத்தில் இன்னொரு தரப்பு உண்டு. ஒரு வகையில் அது பிரதான தரப்பும் கூட. அது – இந்தியா. இது, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்றாலும், அதைத் தீர்ப்பதற்கான எத்தனம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தமான இலங்கை – இந்திய உடன்பாட்டில் தமிழர் நலன்களை
வலியுறுத்தி ஒப்பமிட்ட தரப்பு இந்தியாவே. ஆகவே அதுவும் பங்காளித் தரப்புப் போன்றதே. அது, இன்றும் 13 பற்றியே வலியுறுத்துகின்றது. பேசுகின்றது.

பழைய பல்லவியைக் கீறல் விழுந்த றெக்கோர்ட் மாதிரித் திரும்பத் திரும்பப் பாடுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்து 35 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்தப் பிராந்தியத்தின் வல்லாதிக்கசக்தியாக – ‘இந்திய உபகண்டம்’ என்று தன்னைப் பிரபலாபப்படுத்திக் கொள்ளும் – அந்தத் தரப்பினால் இப்போதும் 13 ஆம் திருத்தத்தை பற்றி வெறுமனே வாய்ப் பேச்சுப் பேசவும், அறிக்கைகளில் வலியுறுத்
தவுமே இயலுகின்றது. அதற்கு மேல் அத்தரப்புக்கு இயலுமை ஏதும் உண்டா என்பதும் இப்போது சந்தே கத்துக்கிடமாகித்தான் வருகின்றது.

13ஐ வலியுறுத்தும் இந்தியா, அதற்கு ஜால்ரா போடும் தமிழ் கட்சிகள் ஆகியவற்றை விட்டு விட்டுப் பார்த்தால், மற்றத் தரப்புக்கள் வற்புறுத்துவது சமஷ்டியைத்தான்.

சமஷ்டி என்றால் என்ன? பகிரப்பட்ட அதிகாரம்மீளப் பறிக்கப்பட முடியாத அதிகாரப் பகிர்வுதான் சமஷ்டி. இந்தியா மூலம் கிட்டிய 13 ஆவது அரசமைப்பு திருத்தம் கடந்த 35 ஆண்டுகளாக முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் கண் முன்னேயே பகிரப்பட்டவை ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை கண்கூடு. இலங்கை விடயத்தில் இந்தியாவின் இத்தகைய இயலாமை, சமஷ்டி கேட்கும் தரப்புக்களின் கோரிக்கையை நியாயப்படுத்தி நிற்கின்றமையை யாரும்
மறுத்து விட முடியாது.

(சிரேஷ்ட ஊடகவியலாளர் ந. வித்தியாதரனால் ‘முரசு’ டிஜிட்டல் நாளிதழில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கள்)

e