சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மேற்படி தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்றுவந்த நிலையில், இன்றும் விவாதம் தொடர்ந்தது.
விவாதத்தின் முடிவில், தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கமைய தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது தீர்மானத்துக்கு ஆதரவாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரச பங்காளிக்கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.
அத்துடன், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அநுரபிரியதர்சன யாப்பா அணியும் ஆதரவாக வாக்களித்தது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, 6 காரணங்களை முன்வைத்து வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்துக்கொண்டது. வாக்கெடுப்பின்போது அக்கட்சி எம்.பிக்கள் இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இருக்கவில்லை. சுதந்திரக்கட்சியும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி, டலஸ் அணி, விமல் அணி என்பன தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
