You are currently viewing ‘கோப்’ எனும் உயரிய குழுவும், பொறுப்பற்ற நியமனமும்!

‘கோப்’ எனும் உயரிய குழுவும், பொறுப்பற்ற நியமனமும்!

மார்ச் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இருந்து விசேட செய்தியொன்று வெளியானது. ‘கோப்’ குழு எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தியாகும். கோப் குழுவின் செயற்பாடு என்ன, பொறுப்பு என்ன என்பன பற்றி அறிந்தவர்களுக்கே இந்த நியமனத்தின் முக்கியத்துவம் விளங்கும்.

அரச நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு பகிரப்பட்டுள்ள ஏனைய வணிகங்களின் கணக்குகளை ஆராய்வதே இக்குழுவின் பிரதான பணியாகும். அரசுக்குரிய நிதி நிர்வாக அதிகாரம் என்பது நாடாளுமன்றத்துக்கு உரித்தானது. இப்படியான முக்கிய பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பே கோப் குழுவுக்கு உள்ளது.

இதற்கமைய எந்தவொரு நபரையும் தமது குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பதற்கும், எந்தவொரு ஆவணத்தையும், கணக்கறிக்கையையும் அல்லது ஏனைய ஆவணங்களையும் ஆய்வு செய்யும் அதிகாரம் இந்த குழுவுக்கு உள்ளது. அதுமட்டுமல்ல அரச சொத்துகளை அணுகவும், அவற்றை பரிசோதனை செய்யவும், அவை தொடர்பில் சிற்சில நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்த குழுவுக்கு அதிகாரம் உள்ளது. இப்படியானதொரு குழுவுக்கு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன போன்ற ஒருவர் நியமிக்கப்படுவது நமக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?

சொத்துகுவிப்பு மற்றும் ஊழல்,மோசடிகள் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும்.

கோப் குழுவின் தலைவர் பதவியென்பது மிக முக்கிய – பொறுப்பு வாய்ந்த பதவியாகும். இக்குழுவுக்கு இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் பார்க்கும்போது அதன் முக்கியத்துவம் விளங்கும். இவ்வாறானதொரு நிலையில் 2010 மார்ச் 31 முதல் 2014 மே 31 வரை அமைச்சராக கடமையாற்றிய நான்கு வருட காலப்பகுதிக்குள் 412 லட்சம் பெறுமதியான சொத்துகள் எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பில் நல்லாட்சி காலத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு ரோஹித அபேகுணவர்தனவிடம் வினவியது, இதற்கு அவரிடம் உரிய பதில் இல்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக 2016 ஜனவரி 8 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் 2021 மார்ச் 19 ஆம் திகதி இந்த வழக்கில் இருந்து ரோஹித அபேகுணவர்தனவை விடுதலை செய்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பு இவ்வாறு அமைந்தாலும், இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் நம்பிக்கையை அவர் இழந்துள்ளார். இவ்வாறு மக்கள் நம்பிக்கை இழந்த ஒருவர் இவ்வாறான பதவிகளுக்கு நியமிப்பது அரசை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவிவகித்தபோது பௌத்தவிவகார அமைச்சராக பதவி வகித்த எதிரிவீர பிரேமரத்னவின் மகள், Colombo Telegraph இணையத்தளத்தின் ஊடாக ரோஹித அபேகுணவர்தனவின் நியமனம் தொடர்பில் கீழ்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“ எனது தந்தையின் சாரதியாக பணியாற்றுவதற்கு சைக்கிளில் வந்த ரோஹித அபேகுணவர்தன, சில வருடங்களுக்கு பிறகு எவ்வாறு பல சொத்துகளுக்கு உரித்துடையவரானார்.” என்பதே அந்த கேள்வியாகும்.
தனது தந்தையிடம் தொழிலுக்கு வந்த சாரதியின் அப்போதைய பொருளாதார நிலை பற்றி அறிந்திருந்த அவர், இவ்வாறு கேள்வி எழுப்புவது தவறு இல்லை என்றே கூற வேண்டும். அவருக்கு மட்டும் அல்ல அரசியல்வாதிகள் தொடர்பில் எம்மில் பலருக்கு அந்த கேள்வி உள்ளது. எனவே, கோப் குழுவின் தலைவரை நியமிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதிக அக்கறையுடன் செயற்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.