You are currently viewing ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி…..!

ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி…..!

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டென்பது ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வருடமாகும். மக்களின் இறையாண்மையின்கீழ் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் பிரயோகிப்பதற்காக பிரதிநிதியொருவரை ஐந்து வருடங்களுக்கு தெரிவுசெய்வதையே ஜனாதிபதி தேர்தல் ஊடாக நாம் செய்கின்றோம். எனவே, இந்த கட்டுரையானது இக்காலகட்டத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மொனறாகலை மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிள்ளைகளுக்கு உயர் தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை தேர்வுசெய்து கற்பதற்கு அங்குள்ள தமிழ் பாடசாலைகளில் வசதி வாய்ப்பு இல்லை. ஆரம்பத்தில் வர்த்தக பாடத்தை தெரிவுசெய்வதற்கு வாய்ப்பு இருந்தாலும் சிறுது காலத்தின் பின்னர் அதுவும் சிக்கலாகியுள்ளது. இது பல வருடகால பிரச்சினை. எனினும், மொனறாகலை பகுதிக்குசென்றவேளையே இது தொடர்பில் தெரியவந்தது. இது தொடர்பில் தகவல்கள் திரட்டிக்கொண்டு செல்கையில் பதுளை மாவட்டத்தின் அவ்வாறானநிலைமையே காணப்படுகின்றது.

இதை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? இது தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்கு ஊவா மாகாண சபை இணையதளம் பக்கம் சென்றபோது, ஊவா மாகாணத்தில் ஆங்கிலமொழிமூல கல்வியை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என தடித்த எழுத்தில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் இருப்பது என்ன? ஊவா மாகாணத்தில் உள்ள அரசியல் அதிகாரிகளுக்கு இங்குள்ள தமிழ், முஸ்லிம் பிள்ளைகளின் கல்வி முக்கியம் இல்லை என்பது இதன்மூலம் புலனாகின்றது. தமிழ்மொழிமூல கல்வியை மேம்படுத்துவதற்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. எனினும், சிங்கள மொழிமூல மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்பது தெரிகின்றது. அதே இணைய தளத்தில் “ ஊவா மாகாண நடுத்தரகால நிலையான அபிவிருத்தி திட்டம்” வெளியிடப்பட்டுள்ளது. 2024 முதல் 2026 வரையான காலப்பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஊவா மாகாணத்தில் தமிழ்மொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அத்திட்டத்தில் தீர்வு இல்லை.

பெருந்தோட்ட மக்களை புறக்கணிக்கும் கதையின் நீட்சியா இது? மலையகம் 200 என மார்தட்டிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானம், கணிதம் பாடங்கள் இல்லாமல்போயுள்ளன என்பது தெரியுமா?

மொனராகலையில் எந்தவொரு தமிழ்மொழிமூல பாடசாலையிலும் விஞ்ஞானம், கணிதபாட பிரிவு இல்லை

“எனது பெயர் லிலான் ஈஸ்வர். வயது 20, நான் இப்போது கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளேன். சர்வதேச உறவுகள் தொடர்பில் கற்பதற்கே தேர்வாகியுள்ளேன். நான் சாதாரணதரத்தில் கல்வி பயின்றபோது உயர்தரத்தில் விஞ்ஞானம் அல்லது கணிதம் கற்க விரும்பினேன். எனினும், மொனறாகலையில் வாழும் எமக்கு அந்த வாய்ப்பு இல்லை. ஏனெனில் மொனராகலையில் உள்ள எந்தவொரு தமிழ் மொழிப் பாடசாலையிலும் விஞ்ஞான, கணிதப் பிரிவு இல்லை. நான் உயர்தரம் படித்த மொனராகலை விபுலானந்த தமிழ் தேசிய பாடசாலையில் கொஞ்ச காலம் வர்த்தகப் பாடம் இருந்தது, ஆனால் இப்போது அதுவும் இல்லை.
உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் பாடங்களைச் கற்க வேண்டுமெனில் ஹட்டன் செல்ல வேண்டும். இல்லையேல் யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பு செல்ல வேண்டும். எனினும், அதற்கான செலவீனங்களை செய்வதற்கு எங்கள் பெற்றோரிடம் பணம் இல்லை. ஆசிரியர்களின் பிள்ளையாக இருந்தால், பெரும்பாலும் அவர்கள் , அவர்களது பிள்ளையை உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் கற்பிக்க யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்புக்கு அனுப்புவார்கள். அதுதான் இங்குள்ள இயல்பான நிலை. நான் 2023 தான் உயர்தரப்பரிட்சை எழுதினேன். என்னுடன் நால்வர் கற்றனர், இருவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு சென்றுவிட்டனர். ஏனைய இருவர் வர்த்தகம் பாடம் கற்க விரும்பினர். எனினும், பாடசாலை இருக்கவில்லை. இறுதியில் அவர்கள் உயர் கல்வியை நிறைவுசெய்யவில்லை.”

லிலான் ஈஸ்வரனின் கதை பாரதூரமானது. ஈஸ்வரனின் கதையை வாசித்தவர்கள் என்னிடம் இந்த கேள்வியை எழுப்பக்கூடும். “வருடம் ஐவர்தான் உயர்தரம் தெரிவாகின்றனர் எனில் எப்படி கணிதம், விஞ்ஞான பிரிவுகளை நடத்த முடியும்” என்பதே அந்த கேள்வியாகும். ஈஸவர் தன்னுடன் இருந்த ஐந்து நண்பர்களை பற்றியே கூறினார். மறுபுறததில் தெற்கில் சில கிராமங்களில் தேசிய பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞான பிரிவுகள் இருந்தாலும், ஆசிரியர்கள் இருந்தாலும், தேவையான வசதிகள் இருந்தாலும் அப்பிரிவுகளில் கற்பதற்கு மாணவர்கள் இல்லை. சில பகுதிகளில் கணித பாட பிரிவில் ஒரு மாணவர்கூட இருக்கலாம். மாணவர்கள் பிரசித்திபெற்ற பாடசாலைகளை தேடி செல்வதே இதற்கு காரணம். எனினும், மேற்படி பாடசாலைகளில் விஞ்ஞானம், கணித பாட பிரிவுகள் மூடப்படவில்லை. இந்நிலைமை ஊவாவில் வேறு வகையில் இருப்பது ஏன்? எமக்குள்ள பிரச்சினை அதுவே. தமிழ்மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறை இதற்கு பிரதான காரணமாக இருக்கக்கூடும். ஊவா மாகாணத்தில் உள்ள ; மாணவர்களை விஞ்ஞானம் அல்லது கணிதம் ஆகிய பாடங்களில் உயர்தரத்தில் கற்க வைக்காமல், மாகாணத்திலுள்ள தமிழ் மொழிமூல மாணவர்கள் மத்தியில் இந்த பாடங்களை பிரபலப்படுத்தாமல், இந்த பாடங்களை கற்பிக்க எவ்வாறு ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியும்? இது ஒரு சுழற்சியாகும். இந்த சிக்கலை தீர்க்க, இந்த சுழற்சியை எங்காவது ஒரு இடத்தில் உடைத்தாக வேண்டும்.

எமக்கு கல்விக்கான சம வாய்ப்பு இல்லை

“ மொனறாகலை மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்து , எனது பாடசாலைக்கு பெயர், புகழ் தேடிக்கொடுக்க முற்பட்டேன். எனினும், நான் மூன்று ஏ சித்திகளைப் பெற்று மொனறாகலை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தை பிடித்தேன். ஆனால் எமது பாடசாலை வரலாற்றில் 3 ஏ சித்திகளைப் பெற்ற முதல் மாணவர் நான்தான். கலைப்பிரிவை தேர்வு செய்து, தமிழ், பொருளியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை தெரிவுசெய்தேன். பொருளியல்தான் புள்ளிகளில் தாக்கம் செலுத்தும் விடயம். அதில் ஏ சித்தி பெற்றால் ரேங் அதிகரிக்கும். நான் ஒருவருடமாக இந்த பாடத்தை கற்றுக்கொண்டிருந்தபோது ஆசிரியர் இடமாற்றம் பெற்று சென்றார். அதன்பின்னர் அப்பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் இருக்கவில்லை. இறுதியில் இந்து கலாசார பாடத்தை தேர்வு செய்தேன். ஒரு வருடம் அந்த பாடத்தை படித்துவிட்டு பரிட்சைக்கு தோற்றினேன். எனது மதிப்பெண்ணில் அது தாக்கம் செலுத்தியது. நான் பொருளியல் பாடத்தை தொடர்ந்திருந்தால் மொனறாகலையில் முதலிடம் பிடித்திருப்பேன். எல்.எல்.பி. செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் பரிட்சை எழுதினேன். ஆனால் தேர்வாக வில்லை. பின்னர் நாட்டில் இருந்து வெளியேற நினைத்தேன். அதற்காகவே சர்வதேச உறவு எனும் பாடத்தை தேர்வு செய்தேன்.

மொனராகலை தமிழ் மாணவர்களில் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் நான் என நினைக்கிறேன், இந்த ஸ்கோர் பிரச்சினையால் பெரும்பாலும் எமது மாணவர்கள் யாழ்ப்பாணம் இல்லாவிட்டால் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கே தெரிவாவார்கள். ஏனெனில் மாவட்டத்தில் சிங்கள மொழிமூல மாணவர்களுடன்தான் எமக்கு போட்டிபோட வேண்டிய நிலை உள்ளது. எனினும், கல்வியில் எமக்கு சம வாய்ப்பு இல்லை. எம்மை தூர வைத்துவிட்டுதான் ஓட்ட பந்தயத்தையே ஆரம்பிக்கின்றனர்.

இங்கு 5 சிங்கள பாடசாலைகளில் ஆங்கிலமொழிமூல கல்வி இருக்கின்றது. எமக்கு அதுகூட இல்லை. அழகியல் போன்ற பாடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு சென்று, இசை, நடனம், நாடகம் போன்ற பாடங்களைப் படித்துவிட்டு ஆசிரியர்களாக வருகின்றனர். அவ்வளவுதான். புத்தல துடுகெமுனு, மொனறாகலை றோயல், வித்யாலோக, மகாநாம போன்ற பாடசாலைகளில் புதிய பாடத்திட்டங்கள் உள்ளன, ஈடெக், பிடெக் போன்ற புதிய பாடங்களும் உள்ளன. ஆனால் எமக்கு அவை எதுவும் இல்லை.

ஈஸ்வரின் கதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுவதற்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்த தமிழ் அரசியல் கட்சிகள் இது தொடர்பில் என்ன நினைக்கின்றன?

யாழ்ப்பாணத்தில் எமக்கு இரண்டாந்தர கவனிப்பே கிடைக்கின்றது

மூன்று தேர்தல் தொகுதிகள், 11 பிரதேச செயலாளர் பிரிவுகள், 10 பிரதேச சபைகள் மற்றும் 319 கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட மொனறாகலை மாவட்டத்தின் சனத்தொகை 5 லட்சத்து 9 ஆயிரமாகும். இந்த சனத்தொகையில் தமிழ், முஸ்லிம் மக்களும் கணிசமான பகுதியினர்.
மொனறாகலை முப்பனவெளி தோட்டத்தில் வாழும் திலகராணியிடமும் இது பற்றி கலந்துரையாடினோம். அவர் முன்பள்ளி ஆசிரியர். வயது 36.

“ இந்த தோட்டத்தில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. சிலருக்கு தோட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வளவுதான், இதில் பல லயன் அறைகள் , 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. பலர் வேலை நிமித்தமாக தோட்ட வேலைக்குச் செல்கிறார்கள். இப்போது சில இளம் பெண்கள் கார்மென்ட் வேலைக்குப் போகிறார்கள். ஆசிரியர்கள் குறைவு, இந்த தோட்டத்தில் உள்ள 20 வீமானோருக்குகூட அரசியல் தெரியாது. வாக்கு என்றால் என்ன? நாம் ஏன் வாக்களிக்கிறோம் என்பது கூட பலருக்குத் தெரியாது. அதனால் தான் இன்னும் மொனராகலைக்கு ஒரு தமிழ் அரசியல் பிரதிநிதி இல்லை. நாங்கள் எப்போதும் சிங்கள தலைவர்களுக்கே வாக்களித்தோம். ஆனால் எங்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எமக்குள்ள உரிமைகள் எவை, நாம் எதற்காக போராட வேண்டும் என்பதுகூட தெரியாது. அதனால்தான் கல்விப்பிரச்சினைகூட தீர்க்கப்படவில்லை. ஆனால் இன்று இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த இளைஞர்கள் பாடுபடுவதில் மகிழ்ச்சி இருக்கிறது. நம் பிள்ளைகள் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் ஆக முடியாதா? எமக்கு ஏன் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது? எங்களின் பிள்ளைகளை எப்படியாவது கஷ்டப்பட்டு பணம் திரட்டி உயர்கல்விக்காக யாழ்ப்பாணம் அனுப்பினால்கூட அங்கு இரண்டாம் தர கவனிப்புதான்…. இந்நிலைமையில் நாம் எப்படி முன்னேறுவது? ஏன் எமக்கு இவ்வாறு செய்கின்றனர்?

திலகராணி எழுப்பும் இந்த கேள்விகளுக்கு பதில்தான் என்ன? இது தொடர்பில் மொனறாகலை பிரதேச சபையின் முன்னாள ;மொட்டு கட்சி உறுப்பினர் சாமர நாணயக்காரவிடம் வினவியபோது, இந்த கல்வி குறித்து கீழ்வருமாறு அவரின் கருத்து அமைந்தது. அவர் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர் ஆவார்.

“ நீண்டகாலமாக மாகாண சபையிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துவருகின்றேன். ஆனால் இன்னும் பதில் இல்லை. இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமன்றி முஸ்லிம் மக்களுக்கும் பெரும் அநீதியாக அமையும். மிகவும் கஷ்டப்பட்டு வாழும் இவர்களுக்கு பிள்ளைகளை கண்டிக்கு அனுப்பியோ அல்லது ஹட்டனுக்கு அனுப்பியோ உயர்கவ்வியை வழங்குவதற்கு பணம் இல்லை. இதனை இந்த அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது, இந்த பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்காமல் இந்த பிரச்சனையை எப்படி தீர்க்க முடியும்? மொனராகலையை எடுத்துகொண்டாலும் பதுளையை எடுத்துக் கொண்டாலும் மாகாண பாடசாலைகள் அதிகமாக இருப்பதால் ஆளுநர் இது தொடர்பில் ஆராய வேண்டும்.” – என்றார்.

ஊவா மாகாணத்தின் இந்த கல்விப் பிரச்சினை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கருத்து என்ன? அச்சங்கத்தின் செயலர் ஜோசப் ஸ்டாலினிடம் இது பற்றி வினவப்பட்டது,

“ இது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்சினை அல்ல, பல வருடங்களாக இப்பிரச்சினை இருந்துவருகின்றது. இதற்கு இப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கூற வேண்டும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவே மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுகின்றனர். ஆனால் பிரச்சினைகள் அவ்வாறே உள்ளன. தமிழ்மொழிமூலக் கல்விக்கு தனிப்பிரிவு நிறுவப்படும் என்றார்கள், நடந்தது என்ன? இந்த அரசியல்வாதிகள் தமது மக்களுக்கு எதையும் வழங்கவில்லை. ஏமாற்று வேலையே தொடர்ந்துள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு இவ்வாறு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது. அவர்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர். இந்த பிரச்சினைக்கூட இதன் ஓர் அங்கம்தான்.

எவ்வித பயிற்சியும் இன்றி ஆசிரியர் உதவியாளர்கள் எனக்கூறி 2 ஆயிரம் பேரை இணைக்கபோகின்றனர். இவ்வாறான நியமனம்மூலம் இப்படியான பிரச்சினைகள் தீரப்போவதில்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளில் ஒரு தமிழ் வசனம்கூட தெரியாத ஆசிரியர்கள் உள்ளனர் என்று 2019 பெப்ரவரி 05 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அப்போதைய ஊவா மாகாண கல்வி அமைச்சராக இருந்த செந்தில் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தமிழ்மொழி தெரியாத சிங்கள ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். ஊவா மாகாணத்தில் நிலவும் தமிழ்மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை, சிங்கள அரசியல்வாதிகள், தமது ஆதரவாளர்களுக்கு வேலைவாயப்பு வழங்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது இதன்மூலம் புலனாகின்றது.