You are currently viewing அரசமைப்பை அப்பட்டமாக மீறியுள்ள சபாநாயகர்!

அரசமைப்பை அப்பட்டமாக மீறியுள்ள சபாநாயகர்!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என பலரும் கருதுகின்றனர். எனினும், அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பது தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முக்கிய சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது.

அடிப்படை உரிமையை மீறிய நபராக கருதப்பட்டு இழப்பீடு வழங்குமாறு நாட்டில் உயரிய நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட நபரொருவரை, இந்நாட்டின் பொலிஸ்மா அதிபராக நியமிக்குமாறு அரசமைப்பு பேரவைக்கு எந்த அடிப்படையில் பரிந்துரை அனுப்பட்டது என்பது முதல் கேள்வியாகும்.

1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் சேதபந்து தென்னகோனுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியுள்ள நிலையில், அவ்வாறானவர் தொடர்பில் ஜனாதிபதி எவ்வாறு இப்படி செயற்பட முடியும் என்பது இரண்டாவது கேள்வியாகும்.

சபாநாயகரின் வகிபாகம்

பெப்ரவரி 26 ஆம் திகதி சபாநாயகர் உட்பட 9 பேர் அங்கம் வகிக்கும் அரசியலமைப்பு பேரவைக்கு இந்த யோசனை வந்தபோது இது தொடர்பில் கருத்தாடல் இடம்பெற்றது. அதன்பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், சிவில் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அரசமைப்பு பேரவையில் இடம்பெற்றுள்ள விசேட வைத்தியர் திருமதி அனுலா விஜேசுந்தர ஆகியோர் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு சார்பாக வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகியோர் எதிராக வாக்களித்தனர். சிவில் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி தினேஷா சமரரத்ன, கலாநிதி பிரதாப் ராமானுஜன் ஆகியோர் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர். இதன்பிரகாரம் – அரசமைப்பில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க முடியாது. இவ்வாறு முடிவின்றி கூட்டம் முடிவடைந்து சற்று நேரத்தின் பின்னர், சபாநாயகருக்குரிய வாக்கின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியானது. இதை அறிந்த கையோடு தனது எக்ஸ் தளம் ஊடாக இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.

அந்தவகையில் சபாநாயகர் அரசமைப்பை அப்பட்டமாகமீறி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோனை நியமித்துள்ளார் என்பது தெளிவாகின்றது. ஏன் அவ்வாறு சொல்கின்றோம்?

அரசமைப்பின் 40 ஆவது சரத்தின் பிரகாரம், உயர் நியமனங்களுக்காக அரசமைப்பு பேரவையில் முன்வைக்கப்படும் நபரொருவரின் பெயருக்கு அனுமதி கிடைக்க வேண்டும் எனில் அதற்கு சார்பாக அரசமைப்பு பேரவையில் ஐவர் வாக்களித்திருக்க வேண்டும். இங்கு நால்வர் மாத்திரமே சார்பாக வாக்களித்துள்ளனர்.

ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகளும், எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளும் சமநிலையில் இருக்கும்போது தனது தீர்மானம்மிக்க வாக்கை சபாநாயகர் பயன்படுத்த முடியும். எனினும், இங்கு வாக்கெடுப்பு பெறுபேறு சமநிலையாக இல்லை. எனவே, அரசமைப்பு பேரவையின் தலைவர் என்ற அடிப்படையில் தனது வாக்கை சபாநாயகர் பயன்படுத்த முடியாது. எனினும், கூட்டம் முடிவடைந்த பின்னர் அரசமைப்புக்கு முரணாக சபாநாயகர் அந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார். இது அரசமைப்புக்கும், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் முரணான செயலாகும்.

தற்போதைய ஜனாதிபதியும், சபாநாயகரும் அரசமைப்புக்கு முரணாக செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது. இருவருமே அரசியல் சாசனம், நாடாளுமன்ற மரபுகள், சட்டத்தின் ஆட்சி என்பன பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அரசமைப்பை அன்றாடம் மீறுகிறார்கள். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கும்? இதனை ஊகத்தின் அடிப்படையில் முன்கூட்டியே கூறிவிடமுடியாது.