You are currently viewing ஜுலை மாதம் பொதுத்தேர்தலை நடத்த முடியுமா? ஜனாதிபதியின் நகர்வு என்ன?

ஜுலை மாதம் பொதுத்தேர்தலை நடத்த முடியுமா? ஜனாதிபதியின் நகர்வு என்ன?

1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜுலை 20 ஆம் திகதியளவில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது சாத்தியமா? தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தாம் பதவியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதியால் சில நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லா தொழிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது என்ற கதை அடிபடுகின்றது.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி பக்கமே மக்கள் ஆதரவு அலை உள்ளது. எனவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை பெற்று ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினாலும் அவர் வெல்வதற்கான சாத்தியம் இல்லை எனக் கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள ஆதரவு அலை 1994 இல் சந்திரிக்காவுக்கு இருந்த மக்கள் ஆதரவை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. 1994 இல் அப்போதைய ஜனாதிபதி டி.பீ. விஜேதுங்க சிந்தித்ததுபோல தற்போதைய ஜனாதிபதியும் சிந்திக்ககூடும்.

அடுத்த பொதுத்தேர்தலில் எந்தவொரு பிரதான கட்சிக்கும் சாதாரண பெரும்பான்மை பலம் கிட்டுமா என்பது சந்தேகமே. எனவே, சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்தால் தான் மீண்டுமொருமுறை ஜனாதிபதி ஆகலாம் என ரணில் விக்கிரமசிங்க கனவு காணக்கூடும். இதனால்தான் பொதுத்தேர்தலை ஜுலை மாதத்தில் நடத்தும் கதை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கலாம். இது சமூகத்தில் உள்ள பிரச்சினையை மேலும் உக்கிரமடைய வைக்ககூடிய முட்டாள் தனமான முடிவாக அமையலாம். ஏனெனில் மக்கள் ஆணைக்கு புறம்பான குழுவொன்று மீண்டும் ஆள முற்பட்டால் நிச்சயம் சமூக கொந்தளிப்பு ஏற்படும்.

ஜனாதிபதி மேற்படி திட்டத்துக்கு அமைய செயற்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தைக் கலைத்தால் அது அரசமைப்பு ரீதியிலான நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். தற்போது ஜனாதிபதியும் அவரது அரசும் அரசியல் சாசனத்தை பொருட்படுத்தாமல் நடந்து கொள்கின்றனர். பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துலவின் நியமனம் போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணங்களாகும்.

நாடாளுமன்றத்தின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் (நாடாளுமன்ற வாக்கெடுப்பால்) தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அரசமைப்பில் உள்ளதா?

“ அரசமைப்பு கட்டமைப்பின் பிரகாரம், அரசியலமைப்பின் 3 வது பிரிவு குடியரசின் இறையாண்மை அதிகாரம் மக்களிடம் உள்ளது எனக் கூறுகின்றது. அந்த இறையாண்மை அதிகாரத்தை அரசின் பல்வேறு கூறுகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை அரசியலமைப்பின் 4வது பிரிவு கூறுகிறது. அதன் கீழ், 4(பி) பிரிவின்படி, ‘மக்களின் நிறைவேற்று அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியால் செயல்படுத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் ஊடாகவே செயற்படுத்தப்பட வேண்டுமென அந்தப் பிரிவு வலியுறுத்துகிறது. இதன்படி, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியினால் மட்டுமே முழுமையாக பயன்படுத்த முடியும்.” – என சில சட்ட வல்லுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்தவகையிலேயே நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தால் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என அவர்கள் கருதுகின்றனர். இடைக்கால ஜனாதிபதிக்கு முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் இல்லை எனவும் வாதிடுகின்றனர்.

“மக்களின் பிரதிநிதிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள். எனவே, நாடாளுமன்றத்தில் மக்களின் இறைமை செயற்படுகின்றது. அந்தவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரித்தான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உள்ளது என மேலும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தவகையில் தற்போது ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அரசமைப்பின் பிரகாரம் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று இரண்டரை வருடங்கள் சென்ற பின்னர் அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. தற்போது இரண்டரை வருடங்கள் கடந்துவிட்டது. எனவே, பொதுத்தேர்தலும் சாத்தியம் என்பதே அவர்களின் வாதமாகும்.

இந்த விடயம் எவ்வாறு இருந்தாலும் – ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதிக்குள் நடத்தப்பட்டாக வேண்டும். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,

“ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது. ஜுலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும். ஒருநாள்கூட இதனை தாமதிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது.

எனவே, 2024 இல் குறித்தொகுக்கப்பட்ட நாளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதைய அரசு சட்டப்பூர்வமான அரசு என்ற சட்டப்பூர்வத்தன்மையை இழந்துவிடும். அதாவது நவம்பர் 18 ஆம் திகதிக்கு பிறகு ஒரு மணிநேரம்கூட ஜனாதிபதி அப்பதவியில் நீடிப்பதற்கு முற்பட்டால் அது சட்டவிரோதம். அரசமைப்பை மீறும் செயல்.” – என்றார்.

எனினும், அரசமைப்பில் உள்ள சர்வஜன வாக்கெடுப்பு என்ற விடயத்தை பயன்படுத்தி ஜனாதிபதி மற்றுமொரு அணுகுமுறையை பின்பற்றுவாரா, அது மற்றுமொரு பிரச்சினைக்கு வழிவகுக்குமா, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.