You are currently viewing பொலிஸ் அதிகாரத்தை இல்லாதொழிக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு!

பொலிஸ் அதிகாரத்தை இல்லாதொழிக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக நீக்குமாறுகோரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவால் குறித்த தனிநபர் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டம் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலம் பெப்ரவரி 13 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது இச்சட்டமூலம் சபையில் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் பொலிஸ் அதிகாரம் பயங்கரமானது. எனவே, மாகாணசபை முறைமையில் இருந்து பொலிஸ் அதிகாரத்தை நீக்குவது தேசியவாதிகளின் 37 வருடகால கனவாக இருந்து வருகின்றது. அந்த கனவை நனவாக்கும் வகையில் மாகாணசபை முறைமையில் இருந்து பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எம்மால் முன்வைக்க முடிந்தது.” – எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

“ இந்த சட்டமூலம் பெப்ரவரி 13 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியாகி உள்ளது. அதில் இருந்து 7 நாட்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும். இதன்படி 20 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமூலத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நாளில் இருந்து 14 நாட்களுக்குள், இச்சட்டமூலம் தொடர்பில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் உயர்நீதிமன்றத்தில் அதனை சவாலுக்குட்படுத்த முடியும். தமிழ்ப் பிரிவினைவாதிகள் இதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லக்கூடும்.” எனவும் அவர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப்பெற்ற பின்னர், அதன்பிரகாரம் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும், அதற்கான பெரும்பான்மையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இதற்காக இந்த ஏற்பாடு?

எதற்காக இந்த சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது என்பது பற்றியும் அவர் விவரித்தார்.

“ மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். போர்காலத்தில் புலிகளுக்கு சில நாடுகள் நிதி அனுசரணை வழங்கின. ஆயுதங்களை வழங்கின. பயிற்சியளித்தன. ஆனால் இவை அனைத்து திருட்டுதனமாகவே இடம்பெற்றன. ஆனால் எமக்கு வெளிப்படையாக ஆதரவு கிடைத்தது. ஏனெனில் எமது பக்கம் இருந்தது உத்தியோகப்பூர்வ படை. புலிகள் என்பது பயங்கரவாத அமைப்பாகும்.

எதிர்காலத்தில் பிரிவினைவாத போர் ஏற்படும்பட்சத்தில் அது வடக்கு மாகாணத்தின் பொலிஸாருக்கும் , இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான போராகவே இருக்கும். இரண்டுமே உத்தியோகப்பூர்வ படைகள். ஆக இலங்கைக்கு எதிரான நாடுகள், எவ்வித தடையும் இன்றி வெளிப்படையாக வடக்கு பொலிஸ் படைக்கு உதவி வழங்கலாம்.

ஒரு பிராந்தியம் குடியரசுக்கு எதிராக செயற்படுகின்றதெனில் மத்திய அரசு தலையிடுவதற்கான அதிகாரம் இந்திய அரசமைப்பில் உள்ளது. ஆனால் இந்திய அரசமைப்பை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இந்திய அரசமைப்பில் மத்திய அரசு தலையிடுவதற்குரிய அதிகாரம், இதில் உள்ளடக்கப்படவில்லை. இதனால் பொலிஸ் அதிகாரம் ஊடாக பிரிவினைவாதிகள் பலமடையக்கூடும்.

மத்திய அரசின் பொலிஸார் அதிகாரி ஒருவர், மாகாணசபை அதிகார எல்லையில் கடமையாற்றும்போது சீருடையில் இருக்க முடியாது. அதேபோல மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைகளை ஏற்க வேண்டும்.

மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் முதல்வருக்கு பொறுப்பு கூறவேண்டும். மாகாண பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள மூவரில் இருவர் முதல்வரின் நியமனம். எனவே, பொலிஸ் அரசியல்மயமாக்கப்படக்கூடும். எனவேதான் நல்லாட்சி மற்றும் தேசிய பாதுகாப்பு துறைகளில் இந்த 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முக்கியத்துவம் பெறுகின்றது.” – என்றார்.

இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். தமிழ்ப் பிரிவினைவாதிகள் மட்டுமே பொலிஸ் அதிகாரம் கோருகின்றனர். எனவே, இச்சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் உதய கம்மன்பில உறுதியாக கூறினார்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு பொறிமுறையாக மாகாணசபை முறைமை உள்ளது. அதனை மேலும் பலப்படுத்தி, சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை தமிழ் மக்கள் கோரிவருகின்றனர். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ககூட 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இவ்வாறானதொரு ஏற்பாடு இடம்பெறுகின்றது.
இதனை சபையில் முன்வைக்க சபாநாயகர் திகதி வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டாலும் உயர்நீதிமன்றம் எவ்வாறான சட்ட விளக்கத்தை வழங்கும் என்பது முக்கியம்.