You are currently viewing ‘வற்’ வரியால் வலிசுமந்த ஆண்டாக மலரும் ‘2024’!

‘வற்’ வரியால் வலிசுமந்த ஆண்டாக மலரும் ‘2024’!

‘வற்’வரி சம்பந்தமாக டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி தமது உடன்பாட்டை வெளிப்படுத்தினர். இதன்படி வற்வரி திருத்தத்திற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 45 மேலதிக வாக்குகளால் வற் அதிகரிப்பு யோசனை நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வற்வரி அதிகரிப்பை விரும்பவில்லை. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொண்டு நாடாளுமன்றம் சென்றவர்களுள் 100 பேர் மக்கள் விருப்புக்கு மாறாக வாக்களித்துள்ளனர். மேலும் சில எம்.பிக்கள் அன்றைய தினம் நாடாளுமன்றம் வருகை தராமல் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்த வரி திருத்தத்தால் 2024 ஆம் ஆண்டு எவ்வாறு அமையப்போகின்றது. இது பற்றிய சிறு பார்வையே இது…….. 

ஐஎம்எப் இலக்கு 

அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக

சர்வதேச நாணய நிதியம், அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது. வற் வரி திருத்த முன்மொழிவும் அதில் ஒன்றாகும். 2022 ஆம் ஆண்டு அரச வருமானத்துடன் ஒப்பிடுகையில் 2025 இல் அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 6.5 வீதமாக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் இத்தகைய இலக்கை எட்டுவது கடினம் என்பது பல பொருளாதார நிபுணர்களின் கருத்து. எனினும்,  இந்த இலக்கை அடையும் திறன் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புகின்றார். வற் வரி அதிகரிப்பு யோசனை இதனையே வெளிப்படுத்துகின்றது. இந்த வரி திருத்தத்தின் மூலம் 600 பில்லியன் ரூபாவை மக்களின் பணப்பையில் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

வற்வரிக்கு உட்பட்ட பொருட்கள், சேவைகளுக்கான தற்போதைய 15 வீதவரி 2024 ஜனவரி முதல் 3 வீதமாக அதிகரிக்கப்பட்டு, 18 வீதம் சேர்க்கப்படும். அதேபோல் இதுவரை வற் வரிக்கு உட்படுத்தப்படாத பொருட்கள், சேவைகள்கூட இந்த திருத்தம்மூலம் வற்பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. சில அத்தியாவசியப் பொருட்களும் உள்ளடங்கியுள்ளன. 

மேலே குறிப்பிட்டுள்ள 18% VAT எந்தெந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிதாக விதிக்கப்படும் என்று கேட்டால், இது வரை அத்தியாவசியமாக இருந்த பல பொருட்கள் மற்றும் சேவைகள் புதிய திருத்தத்தால் அத்தியாவசியமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்று சுருக்கமாகக் கூறலாம். இந்த புதிய வரித் திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, ​​சுமார் 95 வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிதாக 18% வரி விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

பெற்றோல், டீசல், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என முன்னதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால் புதிய வரிச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு கதையே மாறிவிட்டது. மின்சாரத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டாலும், பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியனமீது வற் விதிக்கப்படும் என தெரியவருகின்றது. 

நிலைமை இவ்வாறிருக்கையில் மலரவுள்ள புத்தாண்டு எவ்வாறு அமையும் என நாம்கூறிதான் தெரிய வேண்டுமா என்ன? புதிய நிலைவரப்படி 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு விலை 640 ரூபாவரை அதிகரிக்ககூடும். பெற்றோல் விலை 60 ரூபாவரை அதிகரிக்ககூடும். இவ்வாறு எரிபொருள் மற்றும் எரிவாயுவிலை அதிகரிக்கும்போது ஏனைய பொருட்களின் விலைகளும் நிச்சயம் அதிகரிக்கும்.

தொலைபேசி, கணினி மற்றும் இலத்திரனியில் உபகரணங்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்துள்ளன. அவற்றின் விலைகளிலும் வற் பெரும் தாக்கம் செலுத்தும். 

மூலோபாய அபிவிருத்தி திட்டச் சட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு புறம்பாக கோதுமை, கோதுமா மா, குழந்தைகளுக்கான பால்மா, விவசாய விதைகள், கல்விச் சேவை, மின்சாரம், அரிசி, அரிசி மா என்பனமீதும் வற் தாக்கம் செலுத்தாது. 

2024 ஆம் ஆண்டில் VAT அதிகரிப்பு எந்த வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறித்து ஆராய்வோம். 

நாம் முன்னர் குறிப்பிட்ட எரிபொருளுக்கு மேலதிகமாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாம் ஒயில், காய்ந்த தேங்காய், ரபர், ரபர் பால், தேயிலை, முட்டை, திரவ பால், தொலைபேசி, மது உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எதனோல், இரசாயனம், சீனி, வைத்திய உபகரணங்கள், மருந்துகள்  இரசாயனங்கள், ஆம்புலன்ஸ், விவசாய இயந்திரங்கள், அரசி உற்பத்தி,  கூடு ஓடுகள், முதலீட்டு சபையின் சலுகைகள் பெறாத உள்ளூர் துணிகள், பிரம்பு உற்பத்திகள் என பல பொருட்கள், சேவைகளுக்கு வற் அதிகரிப்பு இடம்பெறவுள்ளது. இதனால் மக்கள்மீதான சுமைகள் மேலும் அதிகரிக்கும். ஊழல், மோசடிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை இன்மை, பொருளாதார சுமைகளால் ஏற்கனவே கடுப்பில் உள்ள மக்களுக்கு, இந்த விலையேற்றங்கள் நிச்சயம் கொதிப்பை ஏற்படுத்தும்.

2024 ஜனவரியில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் முக்கிய இரு தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதனை இலக்கு வைத்து மாத்திரம் மக்களுக்கு சில நிவாரணம் வழங்கப்படலாம். மாறாக பாரியளவு நிவாரணங்களை, சலுகைகளை மக்கள் எதிர்பார்க்க முடியாது. ஆக மொத்தத்தில் வழி பிறக்கும் ஆண்டாக அல்லாமல் வலி தரும் ஆண்டாகவே 2024 மலரவுள்ளது.