You are currently viewing களமிறங்குவாரா ரணில்?

களமிறங்குவாரா ரணில்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க, ஆளும் கட்சியின் பிரதானிகள் சிலருடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

கொழும்பில் நத்தார் விடுமுறைக்கு முன்னர் அமைச்சர்கள் சிலருடன் நடந்த உரையாட லின் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார் என்று கூறப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை எனச் சிலர் கூறும் கதை உண்மையா என அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினராம்.

இதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என இதுவரை கூறவில்லை. போட்டியிடப் போவதில்லை எனவும் கூறவில்லை. எப்படி இருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மேலும் வேலைத்திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. கடன் மறுசீர மைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்யவேண்டியுள்ளது.

புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கு காலம் தேவை” – எனத் தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பதில் அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிட்டுத் தொடர்ந்தும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கும் பகல் கனவில்தான் இருக்கின்றார் என்பதையே காட்டுகின்றது.

அவரின் எடுபிடிகளான அமைச்சர்கள் சிலரும், நிமல் லான்ஸா எம்.பி. போன்றோரும் முன்னெடுக்கும் எடுப்புகள் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் நப்பாசையில் தீவிரமாக உள்ளார் என்பதை நிரூபிக்கும்சாட்சியங்கள். பதவி ஆசை பிடித்த அரசியல்வாதிகளில் தவிர்க்கவே முடியாதவர் ரணில் விக்கிரமசிங்க.

இந்த நாட்டின் மிகப் பழமையான கட்சி யின் – சுதந்திரம் பெற்ற காலம் முதல் மாறி மாறி அதிகாரத்தில் வீற்றிருக்கும் கட்சியின் – தலைமைப் பதவியை 30 ஆண்டுகளுக்கு மேல் விடாமல் தம்முடன் தக்க வைத்து
அதன் பெறுபேறாகக் கட்சியைக் குட்டிச்சுவராக்கி சீரழித்தவர் இந்த ரணில்தான்.

தேசிய மட்டத்தில், எந்த மாவட்டத்தி லும் கூட ஓர் எம்.பியைத் தன்னும் தெரிவு செய்ய முடியாத மிக மோசமான படுதோல்விக்கு கட்சியை வழிநடத்திச் சென்ற பின்னரும், கட்சித் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்காத பதவி ஆசை பிடித்தரணில் விக்கிரமசிங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை விட்டுக் கொடுப்பார் என்று சிலர் நம்புவதும், கருதுவதும், செய்திகளைவெளியிடுவதும் வெறும் அசட்டுத்தனம்.

1999 இலும், 2005 இலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட அவர், அதன் பின்னர் 2010, 2015, 2019 ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொடுத்தார், எதிரணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் என்பவை எல்லாம் உண்மைதான். அது அவர் விரும்பி செய்த விடயங்கள் அல்ல. அவர் விருப்பை மீறி, அவர் மீது திணிக்கப்பட்ட விவகா ரங்கள் என்பதுதான் உண்மை. அந்த தேர்தல்களில் அவர் வெற்றியீட்டக் கூடிய வாய்ப்பு கள் கிஞ்சித்தும் இருக்கவில்லை, அதற்கான வசீகரமும், மக்கள் கவர்ச்சியும் அவருக்குக்கிடையாது, அவற்றில் போட்டியிட்டால் அவற்றிலும் அவர் தோற்பார்,

எனவே மாற்று வேட்பாளருக்கு அவர் இடம் அளிப்பதே பொருத்தம் என்று பல தரப்பி னராலும் – கட்சிக்குள் இருந்தும், வெளியில் இருந்தும், சில சமயங்களில் நாட்டுக்கு வெளியில் உள்ள சக்திகளாலும் – வழங்கப் பட்ட கடும் அழுத்தங்களை அடுத்து, வேறு வழியின்றி தேர்தலில் இருந்து அவர் விலக வேண்டியவரானார் என்பதே உண்மை.

இப்போது அவர் ஜனாதிபதி. நிறை வேற்றதிகாரத்தை ருசி பார்த்து, அந்தத் துடிப்பில் – மிதப்பில் – இருப்பவர். அவர் இப்போது ஜனாதிபதி என்பதால் வெளி அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் ரொம்பவும் குறைவு. ஆகவே இந்த முறை ஒற்றைக் காலில் நின்று ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் அவர் களமிறங்குவார்.

ஜனாதிபதிப் பதவியில் இருப்பவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுடன் பதவியை விட்டு வெளியேறியவர் என்றால் அது மஹிந்த ராஜபக்ஷ ஒருவரே. இப்போது அவரது நெருங்கிய சகா ரணில் விக்கிரமசிங்க.

மஹிந்தவுக்கு 2015 ஜனவரியில் நேர்ந்த கதியை அடுத்த ஒக்டோபர் ஜனாதிபதித் தேர்தலில் தாம் சந்திக்கத் தயாராகின்றார் ரணில் விக்கிரமசிங்க என்றே தோன்று கின்றது.

2015 இல் ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற மஹிந்த ராஜபக்சவை, பாதுகாப்பாக அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைக்க விடியும் வேளையில் அலரி மாலி கைக்கு நேரில் சென்றார் ரணில் விக்கிரமசிங்க. இப்போது ஜனாதிபதி மாளிகை யில் இருந்து ரணிலை அனுப்பி வைக்க யார் போவார்கள் என்பதுதான் கேள்வி. அடுத்த ஒக்டோபரில் அது தெரியவரும்.