You are currently viewing இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளாத இலங்கை பொலிஸார்!

இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளாத இலங்கை பொலிஸார்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த கைதி நாக ராசா அலெக்ஸின் (வயது 26) மரணம் இயற்கை யானது அல்ல, அது மனித உயிர்ப் போக்கு (Homicide) என யாழ்ப்பாணம் நீதவான் அறிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த நபருடன் கைதான மற்றையவர் அளித்துள்ள சாட்சியத்தில் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறிய மூன்று பொலிஸாரையும் கைது செய்யுமாறும், ஏனையோரைக் கைது செய்யும் வகையில் சாட்சியினால் கூறப்பட்ட அடையாளங்களை ஒத்தவர்களை இனம் காண்பதற்குரிய அடையாள அணிவகுப்பை நடத்த ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும்
உத்தரவிட்டார்.

நவம்பர் மாதம் 8ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவரான நாகராசா அலெக்ஸின் மரணம் இயற்கையானதா அன்றி மனித உயிர்ப்போக்காஎனக் கண்டறியும் விசாரணை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அ.ஆனந்தராஜா முன்னி லையில் இடம்பெற்றது. இதன்போதே நீதிவான் தனது கட்டளையில் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விசாரணையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவர், உயிரிழந்த அலெக்ஸ{டன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றைய சந்தேகநபர் மற்றும் ஓய்வுபெற்ற ஆயுர்வேத வைத்தியர் ஆகியோருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசா லையின் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

இவற்றின் அடிப்படையில் இடைக்கால கட்டளையிட்ட நீதிவான் இயற்கையானது அல்லாமல் ஏற்படுத்தப்பட்ட மனித உயிர்ப் போக்குக்குக் காரணமானவர்கள் என அவருடன் இருந்த மற்றைய சந்தேக நபரால் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறப்பட்ட மூன்று பொலிஸாரையும் கைது செய்யுமாறும், ஏனையோரைக் கைது செய்யும் வகையில் சாட்சியினால் கூறப்பட்ட அடையாளங்களை ஒத்தவர் களை இனம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பை நடத்த ஏற்பாட்டை மேற் கொள்ளுமாறும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கான கட்ட ளையை நீதிமன்றப் பதிவாளரை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

உயிரிழந்தவருடன் உடன் இருந்த மற்றைய சந்தேகநபரும் மூன்றாவது சாட்சியுமானவரைப் பொலிஸார் சில விடயங்களை இனம் காண அழைத்துச் செல்லக் கோருவதனால் இரு சட்டத் தரணிகள் சகிதம் அழைத்துச் செல்லவும் கட்டளையிடப்பட்டது.

இதேநேரம் அந்த மரண விசாரணை வழக்கில் உயிரிழந்நவர் சார்பில் 12 பெண் சட்டத்தரணிகள் உட்பட 36 சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

போராட்டம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு கடந்த 21 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக மயானத்திற்கு எடுத்து செல்லும் போது , சடலத்துடன் ஊரவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸாரின் விசாரணை மீது எமக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதுடன் அவர்கள் மீதான சந்தேகமும் வலுத்து வருகின்றன என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகியே அவர் உயிரிழந்தார் என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தங்கேணி இளைஞர் பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்தமை தொடர்பாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சந்தித்து உடன் நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் மீது வட்டுக்கோட்டை பொலிசார் எழுந்துள்ள சந்தேகங்கள் பிரதேச மக்கள் மற்றும் இளைஞனின் வீட்டாரின் ஆதங்கங்கள் குறித்து கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடம், இளைஞனின் இறப்பு தொடர்பாக நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உறுதியளித்தார்.

இலங்கையில் பொலிஸ் காவலில் இருக்கும்போது சந்தேக நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ராஜகுமாரி என்ற மலையக யுவதிகூட பொலிஸ் சித்தரவதையால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.