You are currently viewing ‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

கொழும்பு துறைமுக நகரம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருவதாக  தெரியவருகின்றது. துறைமுக நகரை மேம்படுத்துவதற்கான விழா அண்மையில் டுபாயில் நடைபெற்றது. ‘கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான நேரம் இது’ என்ற தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலீட்டாளர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் நடைபெற்றமை விசேட அம்சமாகும். 

இதன்போது சீனாவுக்கும், கொழும்பு துறைமுக நகருக்கும் இடையிலான உறவு குறித்து அவர் கீழ்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார்.   

” இவை அனைத்தும் சீனாவுக்கு சொந்தமானவை, 

சீனாவால் நிர்வகிக்கப்படுபவை என ஊடகங்களில் கூறப்படுகின்றன. இதன்மூலம் இலங்கை பாரிய தவறை இழைத்துள்ளது என தவறான கருத்து பரப்பட்டுவருகின்றன. இது சரிசெய்யப்பட வேண்டும். இது தொடர்பான சரியான தகவல்களை நீங்கள் தேடி பார்த்தால், அது இலங்கைக்கு உரித்தானது என்பதை அறிவீர்கள். இது இலங்கையால் உருவாக்கப்பட்ட சட்ட விதிமுறைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. சீனா இதில் முதலீடு செய்துள்ளது. இதுவே உண்மை. துறைமுக நகரத்தை உருவாக்குவது அத்தியாவசியம் என்பதால் இது நடந்தது. எனவே, ஏனைய தரப்புகளும் சீனாவுக்கு நிகராக முதலீடுகளைச் செய்து இந்தத் திட்டத்தின் வெற்றியை அனுபவிக்க முயற்சிக்க வேண்டும். அதற்குத் தேவையான சட்ட விதிமுறைகளை இலங்கை அரசு தயாரித்துள்ளது.  வேறு தரப்புகளால் அது தயாரிக்கப்படவில்லை. கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் இறையாண்மை கொண்ட பகுதியாகவே உள்ளது. அந்த நலம் இலங்கைக்கு மீண்டும் முழுமையாக உரித்தாகும்.”   

இந்த நிகழ்வு மேற்குலக முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்ட ஒரு கவர்ச்சிகரமான திட்டம் என்பது தெளிவாகிறது. ஐக்கிய அரபு அமீரகம், லபுவான், சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற ஏனைய நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களை முன்மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் இப்பிரதேசம் இலங்கையில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்த முடியுமா? என்பதே தற்போதைய கேள்வி.

2002 இல் ஐக்கிய தேசிய முன்னணி அரசால் முன்வைக்கப்பட்ட ‘ லலி புபுதமு ஶ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் ஊடாக துறைமுக நகருக்கான அடிப்படைத்திட்டம் முன்வைக்கப்பட்டது. பின்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் சீ.சீ. நிறுவனம் இதன் ஆரம்பக்கட்ட யோசனையை முன்வைத்தது.

துறைமுக நகரப் பணிகள் 2014ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பமாகின. 2015 இல், நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையின் பின்னர், அடிப்படைத் திட்டங்கள் மாற்றப்பட்டு புதிய சூழ்நிலையில் மீண்டும் திட்டமிடப்பட்டது, இது இலங்கைக்கு அதிக அனுகூலங்களைப் பெற்று இறையாண்மையைப் பாதுகாத்தது. அன்றைய பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு முக்கிய பங்காற்றியது என்பதையும் கூறியாகவேண்டும்.  

இந்த மாபெரும் அபிவிருத்தியின் முதன்மை நோக்கம் கொழும்பு துறைமுக நகரத்தை வரியற்ற கொள்கையின் அடிப்படையில் அல்லது ‘வரி புகலிடமாக’ அல்லது நிதி நகரமாக அறியப்படும் வணிகத் தீவாக அபிவிருத்தி செய்வதாகும். இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக 2018 ஆம் ஆண்டு ஆகும்போது CHEC நிறுவனம், ஒரு பில்லியன் டொலர்களை முதலீடுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும், 2019 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் அந்த முதலீட்டு வாய்ப்பு தாமதமானது. அவ்வாறு நடந்திருக்காவிட்டால் இந்த மாபெரும் வளர்ச்சியில் நாம் ஏற்கனவே பலன் அடைந்திருப்போம். 

நெதர்லாந்து, சிங்கப்பூர், அயர்லாந்து, பிரிட்டன், லக்சம்பர்க், ஹாங்காங், கேமன் தீவுகள், பெர்முடா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் இந்த புதிய ‘Tax Haven’ திட்டம் மூலம், தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை பெற்றுவருகின்றன. உலகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் சூழ்நிலை இருந்தாலும், பல நாடுகள்,  இந்த பொருளாதார உத்தியை தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றன. மேற்கூறப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ள சில நாடுகள், இந்த புதிய பொருளாதார உத்தியை ஏற்றுக்கொள்வதற்கு முழு வீச்சுடன் செயற்படுகின்றன. கொழும்பு துறைமுக நகரத்தை  முறையான முகாமைத்துவத்தின் மூலம் நிர்வகித்தால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். 

தற்போதைய நிலைமை…….

2022 செப்டம்பர் மாதம் 2299/46 எனும் இலக்கம் உடைய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதன்மூலம் கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதார வலயத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை பதிவு செய்தல், உரிமம்,  அதிகாரத்தை கைமாற்றுதல் மற்றும் பிற அங்கீகாரங்கள் தொடர்பான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

துறைமுக  நகர சிறப்பு பொருளாதார வலயத்திற்குள் தொடர்புடைய நிறுவனங்களின் பதிவு தொடர்பான விதிமுறைகள் மற்றும்  உரிமங்கள் தொடர்பான கட்டணங்கள்  2299/47 எனும் இலக்கமுடைய வர்த்தமானி ஊடாக 2022 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இது தவிர, கடல்சார் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான விதிமுறைகள் அடங்கிய  2306/54  எனும் இலக்கமுடைய வர்த்தமானி  இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. 

துறைமுக நகரப் பகுதி தற்போது முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதை இது வெளிப்படுத்துகின்றது. கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் 74 காணிகளில் 64 காணிகள் தொடர்பான நடவடிக்கை முழுமை பெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் தொழில்நுட்ப சான்றிதழ்களும் துறைமுக நகரம் தொடர்பில் நிறுவப்பட்ட ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது என தெரியவருகின்றது. இதன்படி தற்போது முதலீட்டாளர்களை விரைவில் இனங்காணவேண்டும்.  பெட்டிகடை அணுகுமுறையை ஒதுக்கிவைத்துவிட்டு, அபிவிருத்தி அடைந்த நிதி நகரமொன்றை கட்டியெழுப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

2022 ஆம் ஆண்டின் இறுதியில், கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நிதியமைச்சு 7 வங்கிகளுக்கான உரிமங்களை வழங்கியதுடன், அந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இந்த புதிய வணிகப் பகுதியில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் எவ்வாறு ஆர்வம் காட்டுகின்றன என்பதை இது காட்டுகிறது. நிதி நிறுவனங்களைத் தவிர, வர்த்தகம், சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை போன்ற பல துறைகளிலும் முதலீடுகள் இடம்பெறவுள்ளன.முதலீடுகள் முழுமைபெற்று கொழும்பு துறைமுக 

நகரம் செயற்பட ஆரம்பித்தால், சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்களிப்பைக் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாதார மையமாக விளங்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

இலங்கை முதலீட்டின் பெறுமதி

இத்துறைமுக நகரம் சீனாவின் திட்டம் – வேலை என பலர் கூறினாலும், இலங்கையும் இங்கு ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்பதை கூறியாக வேண்டும். இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் அதிகார சபை போன்ற அரச நிறுவனங்கள் ஊடாக பல வேலைகளை அரசு செய்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. இங்குறுகடை சந்தியில் இருந்து அமைக்கப்படும் வீதிக்காகவும் இலங்கை தமது நாட்டு மக்களின் வரிப்பணத்தை முதலிட்டுள்ளது.எனவே, இதைப் பாதுகாப்பதுடன், அதை மேலும் மேம்படுத்தி, விரும்பிய இலக்குகளைத் தொடர வேண்டியது அவசியம். அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

முதலீட்டு முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை (சிறு) வணிகங்கள் மற்றும் முதலீட்டு  முக்கியத்துவம் கொண்ட இரண்டாம் நிலை வணிகங்கள் என கொழும்பு போர்ட் சிட்டி தனது இருப்பிடத்தில் உள்ள வணிகங்களை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. சிறு வணிக  அபிவிருத்திக்காக 100 மில்லியன் டொலர் பெறுமதியான நில ஒதுக்கீடு அல்லது  25 டொலர் மில்லியன் பெறுமதியான சமூக உள்கட்டமைப்பு ஆகியவை இதில் அடங்கும் என்று அறியப்படுகிறது.

வருமானம், தொழில் உருவாக்கம், எதிர்பார்க்கப்படும் நிறுவன வளர்ச்சி, இலங்கையின் சமூக அபிவிருத்திக்கான பங்களிப்பு மற்றும் கொழும்பு துறைமுக நகருக்குள் சர்வதேச நிதி மையத்தை உருவாக்குதல் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு கணிசமான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வரிச்சலுகைகளில் கட்டப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அரசாங்க நிர்வாகமும் கொள்கை வகுப்பாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இந்த புதிய நிதி நகரம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். 

துறைமுக நகர ஆணைக்குழு மற்றும் குடிவரவு திணைக்களம் இணைந்து கொழும்பு துறைமுக நகரத்தில் குடிவரவு மற்றும் விசா ஏற்பாடுகள் தொடர்பாக 3 விசா வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. முதலீட்டு விசா (10 ஆண்டுகள்), பணி விசா (5 ஆண்டுகள்  – வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்து மாறுபடும்) மற்றும் தங்குமிட விசா (வாடகை ஒப்பந்தத்தைப் பொறுத்து) ஆகிய மூன்று பிரிவுகளே அவையாகும்.

தெற்காசியாவில் இன்னும் இவ்வாறானதொரு நிதி நகரம் இல்லாத பின்னணியிலும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருவதன் பின்னணியிலும், இந்த நகரத்திற்கு இந்திய-சீன தலையீட்டை திறம்பட பயன்படுத்த முடிந்தால், இந்த நிதி நகரம் இலங்கையை கட்டியெழுப்பும் சக்தியாக மாறும். அதற்கு கொள்கை வகுப்பாளர்கள் கூர்மையான நுண்ணறிவு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஊழல், மோசடி மற்றும் லஞ்சத்திற்கான வாய்ப்புகள் ஒழிக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களை வெளிப்படையான திட்டத்தின் மூலம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு இல்லையேல் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவ பகுதியாக மாறுவதைதவிர வேறு வழி இருக்காது.