You are currently viewing ‘டைம் அவுட்’ ஆவாரா ஜனாதிபதி?

‘டைம் அவுட்’ ஆவாரா ஜனாதிபதி?

உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் ஆட்டத்தின்போது, அஞ்சலோ மெத்தியூஸ் ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார் . துடுப்பாடுவதற்காக மைதானத்துக்குள் வந்த அஞ்சலோ மெத்தியூஸ், குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லைக் கோட்டுக்குள் வராததால் ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்த வீரராகக் கருதப்பட்டு வெளியேற்றப்பட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையை இடைநிறுத்தி, அதன் பணிகளை முன்னெடுப்பதற்காக இடைக்கால நிர்வாக சபையொன்றை அண்மையில் நியமித்தார். எனினும், அமைச்சரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதுபோலவே ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருந்தது. இந்நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் ஜனாதிபதி சற்று பின்வாங்கி, எல்லைக் கோட்டுக்குள் செல்வதா, இல்லையா என யோசித்துவருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி ஆட்டமிழந்தவராக கருதப்படுவாரா?

ஊழல், மோசடியில் ஈடுபட்ட ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆளும் மற்றும் எதிரணிகள் இணைந்து கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூட்டு பிரேரணையொன்றை முன்வைத்து, அதனை தீர்மானமாக நிறைவேற்றி இருந்தன. இந்த நகர்வு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருந்தது. ஜனாதிபதிக்கு விசுவாசமாக தற்போது செயற்பட்டுவரும் மொட்டு கட்சி உறுப்பினர்கள்கூட இந்த பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தனர்.

ஷம்மி சில்வா தலைமையிலான ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையை, நிர்வாக நடவடிக்கையில் இருந்து நீக்கிவிட்டு, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அமைத்ததுடன், அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட கையோடு, ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் அறிக்கையொன்று வெளியானது. இந்த இடைக்கால நிர்வாக சபையின் நியமனம் பற்றி ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிந்த பின்னர் கடந்த 6 ஆம் திகதி அது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஜனாதிபதி விளக்கம் கோரியுள்ளார். அன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர்மீது அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டார். அத்துடன், புதிய இடைக்கால குழு தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்றையும் ஜனாதிபதி அமைத்தார். புதிய குழு தொடர்பில் ஜனாதிபதி எந்த கோணத்தில் சிந்திக்கின்றார் என்பது இதன்மூலம் தெளிவாகின்றது.

கிரிக்கெட் பிரச்சினை இவ்வாறு உக்கிரமடைந்துவரும் நிலையில், புதியதொரு குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை என்பது இதன்மூலம் புலனாகின்றது. அத்துடன், சாகல ரத்னாயக்க உட்பட ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஷம்மி சில்வா தலைமையிலான ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் பக்கம் நிற்பதும் தெளிவாகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால நிர்வாக சபைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது விடயத்தில் தலையிடுமாறு சட்டமா அதிபரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தாலும், சட்டமா அதிபர் அதனை கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டுள்ளார். அமைச்சரின் தீர்மானத்துக்கு ஜனாதிபதி எவ்வாறு பதிலளிக்கின்றார் என்பதையும் இதன்மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்நிலையில் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானி சாகல ரத்னாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வந்து ஆட்சியில் இருக்கும் தரப்பினருக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதற்கு மொட்டு கட்சி குழுவினர் தயாராகிவருகின்றனர் என்பது அதன்பின்னரான சம்பவங்களில் இருந்து புலனானது.

கடந்த 8 ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார். அரசில் உள்ள பலம்பொருந்திய அமைச்சர் ஒருவரே இந்த அறிக்கையை எழுதியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் இந்த விசேட அறிவிப்பு ஊடாக அமைச்சர் விமர்சித்திருந்தார். இதற்கிடையில் இவ்விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் விவாதமொன்றையும் கோரினார். பின்னர் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே ஆளும் மற்றும் எதிரணியினர் இணைந்து கூட்டு பிரேரணையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு தீர்மானம்கூட ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும். இது பாதீட்டிலும் தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக இனிவரும் நாட்களில் அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கும். ஜனாதிபதி தமது பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க இடமளிக்கப்படாமல், ‘டைம் அவுட்’ செய்யப்படுவாரா அதாவது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா? அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்து, எம்.பிக்கள் ‘டைம்அவுட்’ செய்வதற்கு ஜனாதிபதி முற்படுவாரா?