தமது கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை இலக்கு வைத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, இரட்டை அர்த்த வசனத்தை பயன்படுத்தினார் என சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தியதால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் கூடியது.
பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பி பதிலை பெற்றுக்கொள்ளக்கூடிய கேள்வி – பதில் நேரத்தின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, ஓய்வூதியம் பெறுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிலளித்தார். எனினும், பதில் திருப்தியளிக்கவில்லை, பிரதமர் பொய்யுரைக்கின்றார் என ரோஹினி கவிரத்ன சுட்டிக்காட்டினார். இதன்போது ஆளுங்கட்சி எம்.பிக்கள் சிலர் உறுப்பினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
குறித்த எம்.பியால் எழுப்பட்ட இடையீட்டுக் கேள்விக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த பதிலளித்தார்.
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என அறிவிக்க முடிந்த உங்களுக்கு பாதீட்டில் ஓய்வூதியம் பெறுநர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்படுமா என குறிப்பிட முடியாமல் இருப்பது கவலையளிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்,
” ராேஹினி குமாரி எம்.பியை எவ்வாறு மகிழ்ச்சிப்படுத்துவது என்பது எனக்கு தெரியாது, அவரை வேறு விதத்தில் மகிழ்ச்சிப்படுத்த யாராவது இருந்தால் அதனை செய்துகொள்ள முடியும். பிரதமரும், நானும், அமைச்சினால் எழுத்து மூலம் வழங்கப்படும் பதிலையே வழங்க முடியும்.” – என்றார்.
இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டதும், ஐக்கிய மக்கள் சக்தியினர் கொதித்தெழுந்தனர். ராேஹினி எம்.பிக்கு அகௌரவத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அவதூறு பரப்பும் வகையிலும், சபைக்கு பொருத்தமற்ற விதத்திலும் இராஜாங்க அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார். எனவே, நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஹன்சாட்டில் இருந்து அவர் கூறியதை அகற்றுமாறும், இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் , எதிர்க்கட்சி பிரதம கொறடா மற்றும் எதிரணி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பிரதி சபாநாயகருடனும் வாதிட்டனர். இராஜாங்க அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்குமாறும் இடித்துரைத்தனர்.
இதனால் சபையில் பெரும் கூச்சல் ஏற்பட்டது. இதன்போது இராஜாங்க அமைச்சரை நோக்கி, ” இந்த வார்த்தையை எந்த நோக்கில் பயன்படுத்தினீர்கள் என்பதை உங்களால் விளக்கமளிக்க முடியுமா” என கேட்டார். அதற்கு பதிலளிதத இராஜாங்க அமைச்சர் , ” நான் தவறான கோணத்தில் எதையும் குறிப்பிடவில்லை.” – என்றார்.
” ராேஹினி எம்.பி.க்கு அநீதி ஏற்பட்டிருந்தால் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்றத்துக்கு பொருத்தமில்லாத வார்த்தைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு உத்தரவிடுகிறேன். அத்துடன் இது தொடர்பாக சபாநாயகருக்கும் அறிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து சபைக்கு அறிவிக்கிறேன்.” – என்றும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் என்பது உயரிய சபை. சட்டம் இயற்றப்படும் சபை. அவ்வாறானதொரு இடத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிலையியற் கட்டளையின் பிரகாரமே இருக்கின்றது. எம்.பிக்களுக்கு ஒழுக்க கோவையும் உள்ளது. எனவே, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்திலேயே அதிஉயர் சபையில் ஒழுக்கத்தை பேண முடியும்.